ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தின் இருபுறமும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை – திருவள்ளுர் நெடுஞ்சாலை, ஊத்துக்கோட்டையில் ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடி செலவில் புதிதாக மேம்பாலப்பணிகள் கடந்த 2018ல் தொடங்கி, 2021ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த, பாலத்தினை ஊத்துக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள தாராட்சி, பாலவாக்கம், பேரண்டூர், பனப்பாக்கம், சூளைமேனி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திருவள்ளூர் செல்வதற்கும், அனந்தேரி, போந்தவாக்கம், பெரிஞ்சேரி, மேலக்கரமனூர், வடதில்லை, மாம்பாக்கம் போன்ற 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஊத்துக்கோட்டை செல்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள கிராமங்களான அனந்தேரி, மேலக்கரமனூர், பேரிட்டிவாக்கம் போன்ற கிராம மக்கள் பேருந்து வசதி இல்லாததால் நடந்தும், சைக்கிள், பைக் போன்ற வாகனங்களிலும் ஊத்துக்கோட்டைக்கு வந்து தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். அவ்வாறு, அவர்கள் வந்து செல்லும்போது, இந்த மேம்பாலத்தைதான் பயன்படுத்த வேண்டும். அப்போது, அவர்கள் இரவு நேரத்தில் பாலத்தின் மீது இருட்டில் செல்கிறார்கள். அப்படி இருளில் செல்லும்போது வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் மூழ்குகின்றனர். இருள் சூழ்ந்துள்ளதால் வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, பாலத்தின் மீது இருபுறமும் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில்: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் மழை காலத்தில் வெள்ளம் வந்தால் திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை போக்குவரத்து பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறோம். ஒரு வழியாக ஆரணியாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டியது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால். பாலத்தைக் கட்டி முடித்ததும், அதன் மீது மின் விளக்குகள் பொருத்தவில்லை. இதனால், பாலம் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், பாலத்தின் இருபுறங்களிலும் மின் விளக்குகள் பொறுத்த வேண்டும் என திமுக, பாஜ மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர், கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் ஊத்துக்கோட்டை மேம்பாலத்தில் மின் விளக்குகளை பொறுத்த வேண்டும் என்றனர்.

The post ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: