திருவள்ளூர், மார்ச் 13: திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே வாலிபர் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீச்சரிவாளுடன் மதுபோதையில் சுற்றுத்திரிந்த நபர் குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் பூந்தமல்லி, ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, திருத்தணி மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற இடங்களுக்கு 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் மிகுந்து பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் வந்த நபர் ஒருவர் கையில் வீச்சரிவாளுடன் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்த போதை ஆசாமி சாலையில் செல்பவர்களை தன் கையில் இருந்த வீச்சரிவாளை காட்டி மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறிது நேரத்தில் அந்த நபர், அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி அங்கிருந்து சென்றார். வாலிபர் வீச்சரிவாளுடன் ரகளையில் ஈடுப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து மதுபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீச்சரிவாளுடன் சுற்றித்திரிந்த நபர் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து வீச்சரிவாளுடன் சுற்றிய நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வாலிபர் வீச்சரிவாளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.