இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதிகளில் விவசாயிகள் கொய்யா, பப்பாளி, டிராகன், போன்ற பழ வகைகள் சாகுபடி செய்து வருகின்றனர். திருத்தணி பகுதியில் தர்பூசணி பயிர் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். திருவாலங்காடு ஒன்றியம், பொன்பாடி அருகே கொல்லகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேகர் என்பவர், முதல்முறையாக சொட்டு நீர் பாசனம் முறையில் 4 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிர் சாகுபடி செய்துள்ளார். பக்குவத்திற்கு வந்துள்ள தர்பூசணி அறுவடை செய்யும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டிருந்தார். தர்பூசணி அறுவடை குறித்து விவசாயி சேகர் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை சராசரியை விட அதிகளவில் பெய்ததால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால், அதிகளவில் தண்ணீர் தேவைப்படும் தர்பூசணி பயிர் சாகுபடிக்கு தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், சொட்டு நீர் பாசனம் முறையில் பயிரிடப்பட்டது. டிசம்பர் மாதம் தர்பூசணி நடவு செய்து, 3 மாதத்தில் மகசூலுக்கு வந்துள்ளது. முதல் முயற்சியிலேயே அதிக விளைச்சல் தந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது. இருப்பினும், விலையை பொறுத்தவரை கடந்த மாதம் வரை டன் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் வரை விற்கப்பட்டது. தற்போது, விளைச்சல் அதிகரித்துள்ளதால் இம்மாத தொடக்கத்தில் டன் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை மட்டுமே விற்பனையாகிறது. ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 டன் தர்பூசணி மகசூல் செய்யப்படுகிறது. பயிர் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால், பெருமளவில் வருவாய் இல்லை. தொடர்ந்து தர்பூசணி சாகுபடி செய்தால், கோடை வெயில் தீவிரமடைந்து, விற்பனை அதிகரித்தால் விலை உயரும் என்றார்.
The post கோடை வெயில் தொடங்கவுள்ள நிலையில் திருத்தணி பகுதிகளில் தர்பூசணி அதிக விளைச்சல்: விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.