திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா வள்ளி-முருகப்பெருமான் திருக்கல்யாணம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் மாசிப் பெருவிழாவில், சிறப்பு பெற்ற வள்ளி – முருகப்பெருமான் திருக்கல்யாணம் நேற்று அதிகாலை விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் தங்க வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவில், தினமும் உற்சவர் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன சேவைகளில் எழுந்தருளி மலைக்கோயில் மாட வீதியுலா நடைபெறுகிறது.

மாசிப் பெருவிழாவின் 9ம் நாளான நேற்று அதிகாலை சிறப்பு பெற்ற வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. வள்ளி திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் குறவர் சமுதாய மக்கள் திருமணத்திற்கு மேளதாளங்கள் முழங்க பட்டு வஸ்திரங்கள், பழங்கள் மலர்மாலைகள் உள்ளிட்ட சீர்வரிசைகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர். திருமண அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி – முருகப்பெருமானுக்கு, கோயில் அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைப்படி ஹோம பூஜைகள் செய்து வள்ளி திருமணத்தை நடத்தி வைத்தனர். திருக்கல்யாணத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, “அரோகரா… அரோகரா…’’ என்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பெண்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. வள்ளி திருக்கல்யாண ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

The post திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா வள்ளி-முருகப்பெருமான் திருக்கல்யாணம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: