சபரிமலை விரத விழா
துருவன் என்னும் குழந்தைக்கு தெய்வம் வந்தது. பிரஹலாதன் என்ற குழந்தைக்கு தெய்வம் வந்தது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். தெய்வங்களும் குழந்தை வடிவில் வரவே ஆசைப்படுகின்றன. குருவாயூரப்பன், கண்ணன், முருகன், என்று வரிசையாகச் சொல்லலாம். அதனால் குழந்தைத் தெய்வங்களையும், குழந்தைகளையே தெய்வங்களாகவும் கொண்டாடும் மரபு நமக்கு உண்டு. கண்ணனுக்கு ஒரு கிருஷ்ணஜெயந்தி, விநாயகருக்கு ஒரு விநாயகர் சதுர்த்தி, முருகனுக்கு பங்குனி உத்திரம், கந்தசஷ்டி முதலிய விழாக்கள் வரிசையில், குழந்தை தெய்வமான மணிகண்டனுக்கு ஏற்பட்ட ஒரு அற்புதமான விழாதான் கார்த்திகை ஐயப்பன் மாலை அணிந்து சபரிமலை செல்லும் விரதவிழா.
ஐயப்பன் யார்?
பாண்டிய வம்சத்தில் வந்த அரசன் ராஜசேகரன். பந்தள நாட்டை ஆண்டு வந்தான். அவனுடைய மனைவியின் பெயர் கோப் பெருந்தேவி. சிவனையும் விஷ்ணுவையும் அவர்கள் ஆராதனை செய்தனர். அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. ஒரு நாள் பம்பை நதியோரம் அரசன் உலாவச் செல்லும் பொழுது ஓர் அழகான ஆண் குழந்தையைக் கண்டெடுத்தான். பிள்ளையில்லா குறை தனக்கு தீர்ந்து போனதாக பெருமகிழ்ச்சி கொண்டான். குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்ற பெயரை வைத்தான். குழந்தையின் மீது அரசனும் அரசியும் பாசத்தைப் பொழிந்தார்கள். மணிகண்டன் வந்த நேரமோ என்னவோ கோப்பெருந்தேவி கருவுற்றாள். ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ராஜராஜன் என்று பெயர் வைத்தார்கள். இரண்டு குழந்தைகளுமே வளர்ந்தார்கள். ஆனால் நாள் செல்லச் செல்ல அரசிக்கு தானே தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த குழந்தையின் மீது பாசம் அதிகரித்தது.
ராமாயணமும் ஐயப்பன் கதையும்
ஐயப்பன் கதை, ராமாயணம் போலவே வரும். ராமாயணத்தில் கைகேயி தன் வயிற்றில் பிறந்த பரதனுக்குப் பட்டம் கட்ட, கூனியின்ஆலோசனைப்படி ராமனை காட்டுக்கு அனுப்பி விடுவாள். இத்தனைக்கும் அவள் ராமனை நேசித்தவள். இந்த கதையில் அரசி தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரை மணிகண்டனை நேசிக்கிறாள். தன் வயிற்றில் குழந்தை பிறந்தவுடன் பாசம் மாறுகிறது. அங்கே கூனி துர்போதனை செய்தது போல, இங்கே ஒரு மந்திரி அரசிக்கு துர்போதனை செய்கிறான். அதற்காக அரசி தலைவலி என்று நாடகம் போட்டு, அதற்கு மருந்து புலிப்பால் என்று அரண்மனை வைத்தியர் மூலம் சொல்ல வைத்து மன்னனின் மனதை மாற்றுகின்றாள். மணிகண்டனைக் காட்டுக்கு அனுப்பி விட்டு தனக்கு பிறந்த மகன் ராஜ ராஜனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்பது அரசியின் விருப்பம். மணிகண்டன் தன்னுடைய தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக நின்று காட்டுக்குப்
புறப்பட்டான்.
கண்ணனும் மணிகண்டனும்
கண்ணனுடைய வாழ்க்கையில் நடந்தது போலவே மணிகண்டன் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. கண்ணன் தனக்கு கல்வி தந்த சாந்தி பினீ முனிவரின் குழந்தையைக் காப்பாற்றி அவருக்கு குருதட்சணையாக கொடுத்தார் என்று வரலாறு. அதைப் போலவே மணிகண்டன் (ஐயப்பன்) தன்னுடைய ஆசிரியருக்கு என்ன குரு தட்சணை தரவேண்டும் என்ற போது, அந்த ஆசிரியர் ‘‘என்னுடைய பையன் பிறவியில் இருந்தே ஊமையாகவும் செவிடாகவும் இருக்கின்றான். அவனுடைய வாழ்க்கை இனிப் பிரகாசம் அடையச் செய்ய வேண்டும். அதுவே நீ எனக்கு அளிக்கும் குரு தட்சணை” என்றார். குருநாதரின் அந்த வேண்டுகோளை உடனடியாக ஏற்றுக் கொண்ட மணிகண்டன் தனது தெய்வீக அருள் சக்தியினால் குருநாதரின் ஊமை மகனைப் பேச வைத்தான். கேட்க வைத்தான் நல்வாழ்வு அளித்தான்
மாலை போட்டு விரதம் இருப்பது
கார்த்திகை மாதம் முதல் நாள் மாலை அணிந்து விரதம் இருக்க வேண்டும். அப்படி வாய்ப்பு இல்லாவிட்டால், அடுத்து வரும் சனிக்கிழமை அல்லது உத்தர நட்சத்திரம் வரும் நாளில் மாலை அணியலாம். குருநாதரின் கையால் ருத்ராட்ச மாலை அல்லது துளசி மணி மாலையை வாங்க வேண்டும். தீஷா வஸ்திரமும் வாங்க வேண்டும். இவைகளை அணிந்தபின் கோயிலை வலம் வந்து தேங்காய் உடைத்து வழிபட வேண்டும். இன்னொரு விஷயமும் உண்டு.சபரிமலைக்கு முதல் முறையாகச் செல்பவர்கள் பதினெட்டாம் படியில் ஏற வேண்டும் என்பதற்காக பம்பையில் நீராடி உடனே இருமுடி கட்டுகின்றனர். இது சரியான முறை அல்ல. 41 நாள் (ஒரு மண்டலம் என்பார்கள்) விரதம் இருக்க வேண்டும். ஒருகாலத்தில் 60 நாள் விரதம் இருந்தார்கள். கார்த்திகை, மார்கழி முடிந்து, தையில் மகர ஜோதி பார்த்து விரதத்தை முடிப்பார்கள். ஒருவேளை 41 நாள் விரதத்திற்கு முன்னதாக சபரிமலை செல்ல நேர்ந்தால், ஊர் திரும்பி மகரவிளக்கு முடியும் வரை, விரதத்தைத் தொடர வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுகின்றார்கள். வீட்டில் மாலை அணிவதாக இருந்தால் தாயார் கையால் மாலை அணிந்து கொள்ள வேண்டும். துக்க விஷயம் போன்ற காரணங்களால் மாலையைக் கழற்ற நேர்ந்தால் அடுத்த வருடம் மறுபடி முறையாக மாலை அணிந்து செல்ல வேண்டும்.
இருமுடிப் பொருள்கள்
ஒரு துணிப்பையில் இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் ஐயப்பன் சந்நதிக்குத் தேவையான பூஜை பொருள்களையும், ஒரு பகுதியில் தங்களுக்கு வேண்டிய உணவு முதலிய அத்தியாவசியப் பொருட்களையும் ஒன்றுக்கு ஒன்று கலக்காமல் கட்டிக்கொள்ள வேண்டும். அதற்கு முன் யாத்ரா தானம் உண்டு. யாத்திரை புறப்பட்டு விட்டால், எக்காரணத்தை முன்னிட்டும் ஐயப்பன் தரிசனம் கிடைக்கும் வரை, அந்த மூட்டையை கீழே வைப்பதோ, யாத்திரையில் இருந்து திரும்ப வருவதோ கூடாது. இருமுடியில் உள்ள பொருள்கள் மஞ்சள் பொடி 100 கிராம் (மலை நடை பகவதி, மஞ்சள் மாதாவுக்காக) சந்தன பாக்கெட்,குங்கும பாக்கெட், நெய் தேங்காய் ஒன்று, சுத்தமான பசு நெய், விடலைத் தேங்காய் ஐந்து, (எருமேலி சபரிபீடம் சரங்குத்தி பதினெட்டாம் படி ஆழி), கற்பூர பாக்கெட், பச்சரிசி. இந்த பொருட்களை பாலித்தீன் பைகளில் கொண்டு சென்று அங்கங்கே வீசி விட வேண்டாம்.
பின்பற்ற வேண்டிய விதிகள்
கடுமையான விரதம் என்று அஞ்சுவார்கள். பழகிவிட்டால் அற்புத அனுபவமாக இருக்கும். மாலை போட்டவர்கள் கடுமையான பிரம்மச் சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் பச்சை தண்ணீரில் தான் குளிக்க வேண்டும் என்பது நியதி. உடல்நிலை சரியில்லை என்பவர்கள், தண்ணீரின் குளுமையை குறைத்து, சற்று வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். நெற்றியில் சந்தனம், விபூதி, குங்குமம் போன்ற மங்கலச் சின்னங்களை அணிந்து கொள்ள வேண்டும். ஐயப்பனின் திருவுருவப்படத் திற்கு புதிதாக மலர் அணிவித்து, தினமும் ஏதாவது நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். மிக எளிமையாக ஏதாவது ஒரு பழம் வைத்து வழிபடலாம். சரணம் சொல்லி வழிபட வேண்டும். சுத்த சைவமாக இருந்து இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். சாந்தமாகப் பேச வேண்டும். பார்க்கும் அனைவரையும் ஐயப்பனின் ரூபமாகப் பார்க்க வேண்டும் பேசுவதற்கு முன்பும் சரி, பேசி முடித்த பிறகும் சரி ‘‘சுவாமி சரணம்’’ என சொல்ல வேண்டும்.
கன்னி பூஜை
சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் புதிய சாமிகளை கன்னி சாமி என்பர். அவர்களுக்கு வழிகாட்டி நடத்திச் செல்லும் சாமிகளை குருசாமிகள் என்று சொல்லும் வழக்கம் உண்டு. முதல்முறையாக சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கன்னி பூஜை என்னும் சடங்கு நடத்திச் செல்வார்கள். இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழி பூஜை என்று சொல்வார்கள். பொதுவாக கார்த்திகை மாதம் முதல் தேதியில் ஆரம்பித்து மார்கழி மாதம் 11-ஆம் தேதிக்குள் இச்சடங்கு நல்ல நாள் பார்த்து நடத்தவேண்டும். வீட்டில் தான் இதனைச் செய்யவேண்டும். ஒரு தனி பகுதியை தூய்மையாக வைத்து அங்கே ஐயப்பன் படம் வைத்து, விநாயகர், மாளிகைபு றத்து அம்மன், கருப்பஸ்வாமி, கடுத்தை சுவாமி, ஆழிக்குரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்ற வேண்டும். எல்லா தெய்வங்களுக்கும் அவல் பொரி, வெற்றிலை பாக்கு, சித்திரானங்களை வைத்து பூஜை செய்யவேண்டும். மிக முக்கியமாக பக்தர்களுக்கு அவசியம் அன்னதானம் செய்ய வேண்டும்.
செய்யக் கூடாதவைகள்
என்ன செய்வது என்பதைவிட, என்ன செய்யக்கூடாது என்பதில் கவனம் தேவை. சந்தேகம் இருந்தால் அனுபவமிக்க குருமார்களிடம் ஆலோசனை பெறவேண்டும் கோபம் கூடாது. தகாத வார்த்தைகள் கூடாது. சண்டை போடக்கூடாது. காலணி கண்டிப்பாக அணியக் கூடாது. அலுவலக கட்டுப்பாடு காரணமாக வண்ண உடை அணிய முடியாமல், காலணி அணிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் தாராளமாக அணிந்து கொள்ளலாம். மாலையும் நீராடி பூஜை செய்ய வேண்டும். இரவு உறங்கும் போது தரையில் தான் படுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக ஒரு பாய் வாங்கி அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அன்னதானம் செய்ய வேண்டும்
ஐயப்பனுக்கு “அன்னதான பிரபு” என்றொரு நாமம் உண்டு. அதிலும் கன்னி சாமியாக இருப்பவர்கள், வீட்டில் அன்னதானம் அளிப்பது மிகவும் விசேஷமானது. உறவுகளையும் சக கன்னி சாமிகளையும் அழைத்து, பஜனை பாடி, பூஜை செய்து, ஐயப்ப பிரசாதத்தை அன்னதானமாகச் செய்ய வேண்டும். இதை அவரவர்கள் சக்திக்கு ஏற்றபடி செய்யலாம். ஐயப்பனை தினமும் பூஜை செய்துவிட்டு வெளியில் செல்லும்போது தினமும் உங்களால் முடிந்த அளவு ‘அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா’ என்று சொல்லி உணவு வழங்குங்கள். இது ஐயப்பனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் அன்னதானப் பிரபு. அன்னதானத்தில் மகிழ்பவன். அன்ன தானம் செய்வோரை வாழச் செய்பவன்.
பெரிய பாதை
ஆரம்ப காலத்தில் ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருந்து வனப்பகுதி வழியாக நடந்து சபரிமலை சென்றடைந்தனர். சபரிமலை யாத்திரையின் உண்மையான அனுபவத்தைப் பெற, ஏறத்தாழ 50 கி.மீ தூரம் கொண்ட இந்தப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று இன்றும் நம்பப்படுகிறது. இந்த பாதை ‘பெருவழி பாதை’, ‘பெரியபாதை’ அல்லது ‘நீண்ட பாதை’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய பாதை என்பது எருமேலி, பேரூர் தோடு, காளை கட்டி, அழுதை, அழுதை நதி, கல்லிடுங்குன்று, இஞ்சிப்பாறை – உடும்பாறை, முக்குழி, தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலைஇறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் போன்றவற்றைக் கடந்து பம்பையின் அடிவாரத்தைச் சென்றடையும். காளைகட்டியில் வெடி வழிபாடுசெய்து பக்தர்கள் வணங்குவார்கள். அழுதாநதி நீராடி கல்லெடுப்பார்கள். பின்னர் அழவைக்கும் அழுதா மலையில் செங்குத்தாக ஏறுவார்கள். அழுதாநதியில் எடுத்த கற்களை கல்லிடும் குன்றில் வீசி வணங்குவார்கள். இஞ்சிப்பாறைக் கோட்டை, அழுதா மலை இறக்கம் கடந்து, முக்குழி தாவளத்தில் உள்ள மாரியம்மனை வழிபடுவார்கள். கரிவலந்தோடு தாண்டி கதறவைக்கும் கரிமலை ஏற்றம்… இறக்கம் கடந்தால் வருவது பெரியானை வட்டம், சிறியானை வட்டம். இவற்றைக் கடந்தால் பம்பை நதி குறுக்கிடும். இங்கு நீராடி, பூஜைகள் செய்த பின்னரே யாத்திரையைத் தொடங்குவார்கள். இங்கிருந்து தொடங்குவதுதான் சிறிய பாதைப் பயணம்.
சபரிமலை கோயில் அமைப்பு
கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் 1535 அடி உயரத்தில் உள்ளது. கோயில் சிறியது. ஆனால் அழகானது. இயற்கை சூழலில் அமைந்தது. ஐயப்பனின் கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத்தகடுகள் தட்டையாக இல்லாமல் இரண்டு புறமும் சாய்ந்தது போல் இருக்கும். இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளது. உயரமான ஒரு பெரிய முதல் மாடியில் அமைந்துள்ள கோயிலாக அமைந்திருப்பதால் சரங்குத்தி வந்தவுடனேயே கோயில் நம் கண்ணில் தென்படும். 18 படிகள் உண்டு. விரதம் இருப்பவர்கள் மட்டும் 18 படியேறி ஐயப்பனை தரிசிக்கலாம். இப்போது உள்ள ஐயப்பனின் திருக்கோவில் பழமையானது அல்ல. பழமையான கோவில் இருந்த இடத்தில் எழுப்பப் பெற்ற கோயிலாகும்.
பதினெட்டாம் படி
சபரிமலை என்றாலே பதினெட்டாம்படி நினைவுக்கு வந்துவிடும். பதினெட்டாம் படியேறி தரிசனம் செய்வது தான் முறையான தரிசனம். ஆனால், அந்த 18 படிகளை ஏற வேண்டும் என்று சொன்னால், முறையான மண்டல பூஜையும் விரதமும் இருக்க வேண்டும். விரதமும் பூஜையும் முறையாக இல்லாதவர்கள் எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும் பதினெட்டாம் படி ஏறி தரிசனம் செய்ய முடியாது. இந்திய சமய நெறிகளில் பதினெட்டு என்கின்ற எண் மிக உயர்வானது. புராணங்கள் பதினெட்டு. பகவத் கீதையின் அத்தியாயங்கள் 18. மகாபாரதப் போர் நடந்த தினம் 18. மகாபாரத பருவங்கள் 18. சித்தர்களின் எண்ணிக்கை 18. தமிழில் கீழ்க்கணக்கு நூல்கள் 18. பதினெட்டுப் படி ஏறிவரும் பக்தர்கள் ஐந்து கர்மேந்திரியங்களையும், ஐந்து ஞானேந்திரியங்களையும், அன்னமயகோசம் முதலான ஐந்து கோசங்களையும், சத்வ, ரஜோ, தமோ குணங்கள் ஆகியமூன்று குணங்களையும் கடந்து உள்ளுறையும் ஆத்ம னையே ஐயப்பனாகத் தரிசிக்கிறார்கள்.
The post இருமுடி கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை appeared first on Dinakaran.