×

பெயர் சூட்டிய பெம்மான்

இலங்கையர் காவலனான தசமுகன் சிவபெருமானிடமிருந்து தேர் வாள் போன்றவற்றைப் பெற்றதோடு, தன் இசையால் ராவணன் என்ற பெயரினையும் பெற்றான். இதனைத் தேவாரமுதலிகள் தங்கள் பதிகங்களில் சிறப்புற உரைத்துள்ளனர். கோள்கள் அனைத்தையும் வென்றவனான தசமுகன், ஒருமுறை கயிலை மலையை ஒட்டி தன் புட்பகத் தேரைச் செலுத்தினான். அப்புட்பகத் தேரோ குபேரனை ஒருமுறை வாட்போரில் வென்றபோது கைக்கொண்டதாகும்.

தசமுகன் செல்வழியில் கயிலையங்கிரி எதிர்பட்டது. அதனால் தேரோட்டம் தடைப்பட்டது. கோபமுற்ற தசமுகன், மேற்செலுத்த பாகனுக்கு ஆணையிட்டும் தேரினைச் செலுத்த இயலவில்லை. புட்பகத் தேரிலிருந்து இறங்கியவன் கயிலை மலையையே பெயர்க்க முயன்றான். தன் தோள்வலி கொண்டு தடவரையை குலுங்க ஆர்த்து எடுத்தான். தலைக்குமேல் உயர்த்தினான். கயிலை மலை அதிர்ந்தது.பத்துமோரிரட்டித்து தோளால் அரக்கர் கோமான் பாரித்து மலையை எடுத்த காலத்தில் உமையவளோ ஈசனிடம் ஊடல்கொண்டு ஓர்புறம் ஒதுங்கி இருந்தாள். இதனைச் சுந்தரர் திருநாகை காரோணப் பதிகத்தில்,

``தூசு உடைய அகல் அல்குல் – தூமொழியாள் ஊடல்
தொலையாத காலத்து ஓர் சொல்பாடு ஆய் வந்து
தேசு உடைய இலங்கையார்கோன் வரை எடுக்க அடர்த்துத்
திப்பிய கீதம்பாட தேரோடு வாள் கொடுத்தீர்’’
– என்று குறிப்பிடுகின்றார்.

தேவியின் ஊடலுக்கான காரணத்தை அப்பர் பெருமான் திருமறைக்காட்டுப்
பதிகத்தில்,``கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை உடைத்
தென்கையான் தேர்கடாவிச் சென்று எடுத்தான் மலையை
முன்கை மாநரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட
அம்கை வாள் அருளினான் ஊர் அணிமறைக் காடுதானே’’

என விளக்கமுற உறைத்துள்ளதோடு தேவியின் ஊடலுக்கான காரணம் கங்கையைச் சடையில் ஏற்றதுதான் என்பதையும் சுட்டியுள்ளார்.ஊடியிருந்த உமாதேவி நடுக்கமுற்று ஈசனை அணைத்தாள். நங்கையவளின் நடுக்கம் கண்டு நகைத்த ஈசன், தன் கால் விரலைத் தரையில் ஊன்ற இலங்கையர்கோனின் இருபது தோள்களும் நெரிந்தன. மன்னவன் அலறினான். பொருப்பினை எடுத்த தோளும் பொன்முடி பத்தும் புண்ணாய் நெரிப்புண்டன. உடன் தசமுகன் தன்முன் கைநரம்பு ஏழினை எடுத்து யாழாக்கி வேதகீதம் பாடத் தொடங்கினான். இதனை திருஞானசம்பந்தர்,

“அரக்கனார் அருவரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே
கருக்கு வாள் அருள்செய்தான் கழுமல வளநகர்
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே’’
– என்பார்.

மேலும், இருக்கு வேதம் பாடி உய்ந்த தசமுகன் சாமவேதமும் இசைத்தானாம். இதனை, ‘‘சாமவேதம் ஓர் கீதம் ஓதி அத்தசமுகன் பரவும் நாமதேயம் அது உடையார்’’ எனவும் சுட்டுகின்றார். பத்து வாய் கீதம் பாட பண் இசையால் மகிழ்ந்த பரமன் தசமுகன்பால் பரிந்து அவனை மலையின் நெரிப்பிலிருந்து விடுவித்ததோடு ‘‘ராவணன்’’ என்ற திருநாமத்தைச் சூட்டி வாளும் தேரும் அளித்து அருளினானாம். இதனை திருநாவுக்கரசு பெருமானார், ‘‘ராவணன் என்று அவனைப்பேர் இயம்பக் கொண்டார்’’ என்பார். மேலும்,

``கைத்தலங்கள் இருபது உடை அரக்கர் கோமான்
கயிலை மலை அதுதன்னைக் கருதாது ஓடி
முத்து இலங்குமுடி துளங்க வளைகள் எற்றி
முடுகுதலும் திருவிரல் ஒன்று அவன்மேல் வைப்பப்
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு
பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமத்
தத்துவனை தலையாலங்காடன் தன்னை
சாராதே சால நாள் போக்கினேனே’’

– என்று கூறி ராவணன் என்று பெயர் சூட்டியதை வலியுறுத்தியுள்ளார்.ராவணன் என்ற பெயரினைப் பெற்ற இலங்கையின் காவலனாகிய தசமுகனின் வரலாறு கூறும் அரிய சிற்பக் காட்சிகள் கீழப்பழையாறு சோமநாதர் கோயிலிலும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலிலும் இடம்பெற்றுள்ளன. கயிலைமலையைத் தன் தோளில் சுமந்துள்ள முழுஉருவச் சிற்பக்காட்சி சோமநாதர் கோயில் மண்டபத்தில் உள்ளது.

தசமுகன் பெயர்த்த கயிலை மலையைத் தன் தோளில் சுமந்தவாறு எழ முயல்கின்றான். ஆர்த்து குலுங்கிய மலையால் அச்சமுற்ற உமாதேவி ஊடல் கொண்டபோதும் பெருமானைக் கட்டி அணைக்க முயல்கின்றாள். பெருமானோ தன் ஊன்றிய வலக்கால் விரலால் மலையை அழுத்துகின்றார். மலையின் புழைகளில் புலி பாம்பு போன்றவை உள்ளன. பெருமான் மான் மழு ஆகியவற்றைத் தன் பின்கரங்களில் ஏந்தியுள்ளார்.

புடைப்புச் சிற்பமாக இல்லாமல், முழு உருவச் சிற்பமாக இருக்கும் இக்காட்சி அரிதினும் அரிய ஒன்றாகும். தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் ஸ்ரீ விமானப்புறச் சுவரில் புடைப்புச் சிற்பக் காட்சியாக தசமுகன் கயிலையைப் பெயர்க்கும் வரலாறு இடம்பெற்றுள்ளது. கயிலை மலையின் புழைகளில் முனிபுங்கவர்களும், விலங்குகளும், சர்ப்பங்களும் உள்ளன. கயிலை மலை மீது சுகாசனராகச் சிவபெருமான் அமர்ந்து இருக்க அருகே உமாதேவி அமர்ந்துள்ளாள். கயிலை மலையை தசமுகன் தன் இருபது கரங்களால் தலைக்கு மேலே தூக்கியவாறு எழ முயல்கின்றான். அருகே அவன் வந்த புட்பகத் தேர் உள்ளது.

இக்காட்சிக்கு மேலாகச் சிவபெருமானும் உமாதேவியும் அமர்ந்திருக்க அருகே குள்ளபூத கணமொன்று நிற்கிறது. எதிரே ராவணன் என்ற பெயர் சூட்டப்பெற்ற தசமுகன் பெருமானை வணங்கி நிற்கிறான். இக்காட்சியும் மிகவும் அரிய ஒன்றாம். சிவபெருமானிடமிருந்து தேர், வாள், ராவணன் என்ற பெயர் ஆகிய அனைத்தும் பெற்றவன் தசமுகன். தருமநெறி மீறியதால் ராமனால் மரணமுற்றான்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post பெயர் சூட்டிய பெம்மான் appeared first on Dinakaran.

Tags : Femman ,Tasamugan Shivaberuman ,Ravanan ,Dasamukhan ,Mount Kayla ,Bemman ,
× RELATED குறவன் பெயரை பொதுஇடத்தில் பயன்படுத்த தடைகோரி ஐகோர்ட் கிளையில் மனு..!!