×

நிதர்சனமான உண்மை

சிலர் திருமணத்தில் செய்யும் செலவில் பாதியைகூட, பலர் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் எட்டுவதில்லை. பணக்காரர்களின் பாத்ரூம் பரப்பளவைவிட, பல கோடி குடிசைகளின் பரப்பளவு சிறியது. சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவுகூட பல பெண்களிடம் சேலைகள் இல்லை. சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையைவிட, பல கோடி மக்களின் ஒரு வருட சம்பளம் குறைவு. சிலர் வயிறு குறைய ஓடுகிறார்கள். பலர் வயிறு நிறைய ஓடுகிறார்கள். சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும், பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள். ஒரு ஸ்கூட்டரில் மூன்று பேர் செல்ல முடியாது, நான் நடந்து வருகிறேன் எனக் கூறுகிறார் ஒருவர். ஆனால், எதிர்முனையில் ஒரே ஒருவர் காரில் ஹாயாக போகிறார். நமது நாட்டில் நட்சத்திரம் உணவு விடுதியில் விற்கும் ஒரு பிளேட் சிக்கன் விலையில் ஒரு ஏழைக்குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம். பகல் நேரத்தில் ஏசியும், ஃபேனும் ஒரே அறையில் ஓடும் வீடுகளும், இரவில் ஒரு விளக்குகூட எரிய வசதியற்ற வீடுகளும் ஒரே கிராமத்தில் எதிரெதிரே இங்குண்டு.

கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும் கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும் தேசம் இது. இறைமக்களே, உலகில் ஏழைகள் இருப்பதற்கு கடவுளை காரணம் சொல்வது ஏற்புடையது அல்ல. மனிதர்களாகிய நாம்தான் காரணம் என்ற நிதர்சனமான உண்மையை நாம் அறிய வேண்டும். ஒருவன் சுரண்டுகிறான், ஒருவன் பறிகொடுக்கிறான். பகிர்தல் என்னும் குணம் எல்லோரிடமும் இருந்து விட்டால், ஏழைகள் எப்படி இருப்பார்கள்? வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் எப்படி இருக்கும்?‘‘உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக’’ (மத்.22:39) என்றும் ஏழைகளை, எளியவர்களை அவமதிப்பது பாவம் என்றும் இயேசுகிறிஸ்து கூறுகிறார். ‘‘பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்’’ (நீதி.14.21). இறைமக்களே, நிதர்சனமான உண்மையை உணர்ந்து உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் நீங்கள் எந்த விதமாக நேசிப்பீர்களோ, அதுபோலவே பிறரையும் நேசியுங்கள். ஆம், உலகம் ஒரு குடும்பம். நாம் ஒவ்வொருவரும் ஒரே குடும்ப அங்கத்தினர்கள். நமக்குள்ளே பாரபட்சமின்றி பகிர்தல் என்ற குணத்தை வளர்த்து பாக்கியம் பெறுவோம்.

அருள்முனைவர். பெ.பெவிஸ்டன்.

The post நிதர்சனமான உண்மை appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள்