×

ஊஞ்சல் விழாக்கள்

வாழ்வில் மகிழ்ச்சியைப் புலப்படுத்தும் விளையாட்டுக்களில் ஊஞ்சல் விளையாட்டும் ஒன்றாகும். ஆதியில் மனிதர்கள் ஆல மரத்தின் விழுதுகளை இணைத்துக் கட்டித் தொட்டிலாக்கி அதில் அமர்ந்து ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். அது இன்று வரை தொடர்கிறது. திருமணங்களில் ஊஞ்சல் ஆடுதல் ஒரு சடங்காக இருந்து வருகிறது. ஊஞ்சலில் அமர்ந்து ஆடுதல், மனச்சுமையைக் குறைத்து, மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதால், சென்ற நூற்றாண்டு வரை பெரும்பாலான வீடுகளில் ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஊஞ்சலில் அமர்ந்து பெண்கள் ஆடி மகிழ்ந்தனர். தெய்வங்களும் ஊஞ்சலாட்டத்தை விரும்புகின்றன. குறிப்பாக, பெண் தெய்வங்கள் ஊஞ்சலாட்டத்தை
விரும்புகின்றன. ஆலயங்களில் ஊஞ்சல் விழா கொண்டாடுவதற்கென்றே ஊஞ்சல் மண்டபங்கள் அமைந்துள்ளன. கொங்குநாட்டுத் தெய்வங்களின் ஆலயம் முற்றத்தில் ஊஞ்சல் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தெய்வங்கள், ஆலயத்தைவிட்டு வெளியே செல்லும் போதும், மீண்டும் உள்ளே வரும் போதும் இந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவதாகக் கூறுகின்றனர்.

சிவாலயங்களில், அம்பிகைக்கு வெள்ளிக்கிழமைதோறும் மாலையில் ஊஞ்சல் விழா நடத்துகின்றனர். அம்பிகையை அலங்கரித்து ஊஞ்சலில் அமர்த்தி, நாதஸ்வரம் இசைத்தல், பாட்டுப் பாடுதல், வீணை வாசித்தல் போன்றவற்றை நிகழ்த்துகின்றனர். ஊஞ்சலில் வெண்கலத்தாலும் வெள்ளியாலும் ஆன மணிகளை இணைத்திருப்பர். இவை ஊஞ்சல் ஆடும்போது இனிய ஓசையை எழுப்புகின்றன. ஊஞ்சல் விழாவில் பாடுவதற்கென்றே நாட்டுப் புலவர்களால் பாடப்பட்ட அனேக ஊஞ்சல் பாட்டுக்கள் உள்ளன. சில ஆலயங்களில் அம்பிகையையும், சுவாமியையும் எதிர் எதிரே அமைந்த ஊஞ்சல்களில் அமர்த்தி சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். ஊஞ்சலை மனதிற்கு உருவகமாகச் சொல்வர். மனம் நிலை இல்லாமல் காலப்பெருவெளியில் முன்னும் பின்னும் ஓயாது பயணித்துக்கொண்டே இருப்பதைப் போலவே, ஊஞ்சல் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே இருக்கிறது.

நாகலட்சுமி

The post ஊஞ்சல் விழாக்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள்