கார்த்திகை அமாவாசை
30.11.2024 – சனி
கார்த்திகை அமாவாசை மிக முக்கியமானது. சூரியன் தனது நீச நிலை நீங்கி ஆரோகண நிலையில் பயணிக்கும் முதல் ராசியில் (விருச்சிக ராசி) நிகழும் அமாவாசை. சூரியனின் பிள்ளையான சனியின் கிழமையில் நிகழ்வது இன்னும் விசேஷம். விசாகம் (குரு), அனுஷம் (சனி) நட்சத்திரங்களில் வருகிறது. இந்த ஆண்டு குருவின் பார்வையோடு நிகழ்கிறது. செவ்வாய் (ராசி), சனி (கிழமை), குரு (நட்சத்திரம்), சூரியன், சந்திரன் இவர்களின் பூரண அனுக்கிரகம் கிடைக்க காலை பிதுர் காலத்தில், முன்னோர் வழிபாடு இயற்றுங்கள். அன்னதானம் செய்யுங்கள். மாலை ஆலயங்களில் தீபம் ஏற்றுங்கள்.இந்தக் கார்த்திகை அமாவாசைக்கு இன்னும் ஒரு சிறப்புண்டு. வடநாட்டு கங்கை, தென்னாட்டில் ஒரு பக்தருக்காக வந்ததும் இந்த அமாவாசையில் தான். அது என்ன கதை என்று பார்ப்போம்.
கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் ஸ்ரீ தரஐயாவாள். இவர் தன் பதவி சொத்துக்களைத் துறந்துவிட்டு, காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் குடியமர்ந்துவிட்டார். தினமும் அருகேயுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார். சிறந்த சிவபக்தர். கார்த்திகை மாதத்தில், ஒரு நாளில் சிரார்த்த சமையல் செய்ய ஏற்பாடு செய்துவிட்டுக் காவிரியில் நீராடச் சென்றார். நீராடி இல்லம் திரும்பும்போது எதிரே வந்த வயதான ஏழை ஒருவர், ஐயாவாளிடம், ‘‘சுவாமி ரொம்ப பசிக்கிறது. ஏதாவது சாப்பிடக் கொடுங்களேன்’’ எனக் கேட்டார். அவர் மீது இரக்கம்கொண்ட தரஐயாவாள் அவரை இல்லத்திற்கு அழைத்து வந்து, பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக் கொடுத்துப் பசியாற்றினார். அதனால் கோபமடைந்த அந்தணர்கள், வீட்டைவிட்டு வெளியேறினார்கள்.
‘‘பரிகாரம் செய்தால்தான் நாங்கள் திதி கொடுப்போம்’’ என்றனர்.
‘‘என்ன பரிகாரம்?’’ என்று வினவிய ஐயாவாளிடம், ‘‘இப்போதே கங்கையில் நீராடி வரவேண்டும்’’ என்றுகூறி சென்றுவிட்டனர். ஒரே நாளில் எப்படி தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு அன்றே திரும்பமுடியும்? “மகாலிங்க சுவாமி! இதென்ன சோதனை?’’ என நினைத்து வருத்தத்துடன் படுத்தவர், அசதியில் உறங்க, கனவில் சிவன் காட்சி கொடுத்து,‘‘உன் இல்லக் கேணியில் கங்கையைப் பிரவேசிக்கச் செய்வேன்’’ என உறுதியளித்து மறைந்தார். இக்கனவை ஐயாவாள் எல்லாரிடமும் சொன்னார். கார்த்திகை மாத அமாவாசை. ஊரே திரண்டு ஐயாவாள் வீட்டு முன் கூடிவிட்டது. ஐயாவாள் கிணற்றடியில் நின்றபடி மனம் உருக கங்காஷ்டகம் பாடினார். ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்தது. திருவிசநல்லூர் சாலை முழுவதும் கங்கை வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள். அந்தணர்கள் ஐயாவாளிடம்மன்னிப்பு கேட்டுவிட்டு, கங்கை நீராடினார்கள்.இன்றைக்கும், கார்த்திகை அமாவாசையன்று தரஐயாவாள் இல்லக் கிணற்றில் நீர் பொங்கி வருவதைக் காணலாம். இன்று கார்த்திகை அமாவாசை திதி.
யோகிராம்சுரத்குமார் ஜெயந்தி
1.12.2024 – ஞாயிறு
விசிறி சாமியார் என்றும் காசி மகான் என்றும் அன்போடு அழைக்கப்படும் யோகிராம் சுரத்குமார் அவர்களின் ஜெயந்தி தினம் இன்று. டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி அன்று, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ யோகிராம் சுரத்குமார் சுவாமிகளின் ஆசிரமத்தில், அவரது ஜெயந்தி விழா விமர்சையாக பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாகக் கொண்டாடப்படும். அதேபோல், அவரது பக்தர்களால் தமிழகத்தின் அநேக ஊர்களிலும் யோகியின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ ரமண மகரிஷி, பப்பா ராம்தாஸ் சுவாமிகள் ஆகிய மூவரும் உருவாக்கிய அருளாளர் யோகிராம்சுரத்குமார். காலம் முழுவதும் ராம நாமத்தை உச்சரித்து அதையே மந்திரமாக்கிப் பல அற்புதங்கள் செய்த திருவருள் சித்தர் இவர்.
தன்னைப் பிச்சைக்காரன் என்று அவ்வப்போது இவர் கூறிக் கொண்டாலும், பக்தர்கள் இவரைக் ‘கடவுளின் குழந்தை’ என்றே போற்றினார்கள். இவரின் பார்வை பட்டாலே போதும் சகலமும் சித்திக்கும் என்று நம்பினார்கள். குழந்தையைப் போல் எப்போதும் குலுங்கி குலுங்கிச் சிரித்தவாறே இருப்பார். பிச்சைக்காரன் என்று தன்னைக் கூறிக்கொண்டாலும், மக்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டு வருவதைக் கண்டு ஆரம்பத்தில் விலகிச் சென்றார். எந்த உணவைக் கொடுத்தாலும் சிரட்டையில் பெற்றுக் கொள்வார். அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார். இனிப்பு கொடுத்தே பல பக்தர்களின் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி உள்ளார். வெறும் பால் கொடுத்து வயிற்று வலியை நீக்கி உள்ளார். ஆயிரக்கணக்கான மக்கள் இவர் பார்வை பட்டே பல நோய்களும், கடன் பிரச்னைகளும் நீங்கி இருப்பதாக இன்றும் சொல்கிறார்கள்.காசிக்கு அருகே சிறிய கிராமமான ‘நர்தரா’ என்ற ஊரில், 1918 டிசம்பர் 1-ஆம் நாள் பிறந்த யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி தினம் இன்று.
திந்திரிணி கௌரி விரதம்
2.12.2024 – திங்கள்
திந்திரிணி என்பது புளியைக் குறிக்கும். புளிய மரத்தடியில் கௌரி பரமேஸ்வரர் படத்தை ஆவாஹணம்(உயிரூட்டுதல்) செய்து, பூக்களைச் சூட்டி, தூப தீபங்கள் காட்டி, பூஜை செய்ய வேண்டிய நாளாக முன்னோர்கள் இந்த நாளைச் சொல்லி இருக்கின்றார்கள். இன்றைக்குச் செய்ய வேண்டிய நிவேதனமும் புளிப்புச் சுவை உடையதாக இருக்க வேண்டும். முக்கியமாக புளிச்சோறு அதாவது புளியோதரை இன்றைய நிவேதனத்தில் முக்கிய பங்காக இருக்க வேண்டும். இந்த விரதத்தினால் தம்பதிகளின் ஒற்றுமை அன்யோன்யம் ஓங்கும். குடும்பத்தில் பிரிவு ஏற்படாது. குடும்ப ஒற்றுமையும் குதூகலமும் சிறக்கும். பொதுவாக சுக்கிரன், சில ஜாதகங்களில் கன்னி ராசியில் நீசம் அடைந்திருப்பார். பலமிழந்து அல்லது வேறு ஏதாவது ஒரு ராசியில் பாவ கிரகங்களோடு இணைந்து இருப்பார். அப்படி அமைந்த ஜாதகங்களுக்கு சுபத் தடைகள் இருக்கும். திருமணத் தடைகள் முதலிய தோஷங்கள் நிற்கும். முக்கியமாக சனிதோஷம் விலகும்.
மூர்க்க நாயனார் குருபூஜை
3.12.2024 – செவ்வாய்
அடியார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சிவத்தொண்டுபுரிந்தவர்கள். அதில் மூர்க்க நாயனார் அடியார்களுக்காக தமது செல்வம் அனைத்தும் இழந்தபிறகும். சூதாடி கிடைத்த பணத்தில் சிவனடியார்களுக்கு உதவியவர் மூர்க்கநாயனார். மூர்க்கநாயனார், தொண்டை நாட்டின் திருவேற்காட்டில் வேளாளர் குலத்தில் தோன்றினார். சிவனடியார்களையே சிவனெனத் துதித்தும், திருநீறே மெய்ப்பொருள் என்று கருதியும் வாழ்ந்தார். சிவனடியார்களைத் தனது இல்லத்திற்கு அழைத்துவந்து திருவமுது செய்வித்து, பின்னரே தாம் உண்பார். மூர்க்கநாயனாரின் சிவத்தொண்டு பற்றி அறிந்த சிவனடியார்கள் பலரும் அவரை நாடி வந்து உதவிகள் பெற்றுச் சென்றனர். இதனால் மூர்க்கநாயனாரின் செல்வ வளம் குறையத் தொடங்கியது. இருந்தாலும், தம்மிடம் உள்ள உடைமைகள் எல்லாவற்றையும் விற்றுத் தம் திருப்பணியைச் செய்துவந்தார். சிவத்தொண்டிற்குப் பொருள் இல்லாது போயிற்று. அதனால்தான் முன்னமே நன்கு அறிந்திருந்த சூதாடும் தொழில் மூலம் பொருளீட்ட எண்ணினார். சூதாடி அதன்மூலம் பொருளீட்டி, அதைக் கொண்டு அடியவர்களுக்கான திருப்பணிகளைச் செய்தார். சூதில் வென்ற அப்பணத்தைத் தம் கையால் தீண்டாமல், அமுது ஆக்குவோர்களைக் கைக்கொள்ளச் செய்து, அதுகொண்டு பொருட்கள் வாங்கிச் சமைக்கச் செய்து, அங்குள்ள சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விப்பார். சூதாடியும், சூதில் வஞ்சகம் செய்பவர்களைத் தாக்கியும் மூர்க்கத் தனமாக நடந்து கொண்டதால் இவர் ‘மூர்க்க நாயனார்’ என்று அழைக்கப்பட்டார். இறுதியில் சிவபதம் அடைந்தார்.
அருணாசலேஸ்வரர்
உற்சவம் ஆரம்பம்
4.12.2024 – புதன்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் – 10 நாள் கார்த்திகை தீபத் திருவிழா, 2024 டிசம்பர் 4 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்.
முக்கிய நிகழ்வுகள்:
4 டிசம்பர் 2024 – புதன் – காலை – லக்னம் – கொடியேற்றம் (கொடியேற்றம்) – பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள் – இரவு – பஞ்சமூர்த்திகள் – வெள்ளி அதிகார நந்தி, ஹம்ச வாகனம்
10 டிசம்பர் 2024 – செவ்வாய் – காலை 7 மணி முதல் – லக்னம் – விநாயகர் தேர் வடம் பிடித்தல் – பஞ்சமூர்த்திகள் – மகா ரதங்கள் – தேரோட்டம்.
13 டிசம்பர் 2024 – வெள்ளி – அதிகாலை 4 மணி – பரணி தீபம் – மாலை 6 மணி – மகா தீபம் – (கார்த்திகை தீபம்) – இரவு – பஞ்சமூர்த்திகள் – தங்கரிஷப வாகனம்.
14 டிசம்பர் 2024 – சனி – இரவு 9 மணி – ஐயங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல்.
15 டிசம்பர் 2024 – ஞாயிறு – அதிகாலை – அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் (அருள்மிகு பெரிய விநாயகர்) கிரி பிரதட்சணம் – இரவு 9 மணி – ஐயங்குளத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தெப்பல்.
16 டிசம்பர் 2024 – திங்கள் – இரவு 9 மணி – ஐயங்குளத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் தெப்பல்.
17 டிசம்பர் 2024 – செவ்வாய் – இரவு – அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனம்.
சம்பா சஷ்டி விரதம்
7.12.2024 – சனி
சம்பகாசுரனை கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டியில் வதம் செய்ததால், அந்த சஷ்டி ‘‘சம்பா சஷ்டி’’ என்றழைக்கப்படுகிறது. கார்த்திகை பிரத்யேகமாக ‘‘சம்பா சஷ்டி விழா’’ பைரவருக்கு நடைபெறுகிறது. இரண்யாட்சன் என்ற அசுரனின் புதல்வர்கள் இருவர் அந்தகாசுரன் மற்றும் சம்பகாசுரன். சிவ பக்தர்களான அவர்கள் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். இதுகுறித்து தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். ஈசன் பைரவரைத் தோற்றுவித்து சம்பகாசுரனை அழித்தார். அந்தகாசுரனை அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான திருக்கோவிலூரில் வதம் செய்தார். பைரவர்கள் அஷ்ட பைரவர்களாகவும், அறுபத்து நால்வராகவும் உள்ளனர். சம்பகாசுரனை கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டியில் வதம் செய்ததால், அந்த சஷ்டி ‘‘சம்பா சஷ்டி’’ என்றழைக்கப்படுகிறது. பல மாநிலங்களில் இச்சஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் ஆறு நாள்கள் விரதமிருந்து சஷ்டியன்று யோக பைரவரை வழிபட்டு விரதத்தை நிறைவேற்றிக்கொள்கின்றனர். தமிழகத்தில் சில தலங்களில் மட்டும் சம்பா சஷ்டி கொண்டாடப்படுகிறது. அவற்றில் ஒன்று சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புத்தூர் அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில். இன்று விரதமிருந்து, பைரவர் சந்நதியில் மிளகு தீபம் ஏற்றி, செவ்வரளிப் பூ சாற்றினால் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும். சம்பாசஷ்டி விரதத்தைக் கடைப் பிடிப்பதால், மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கை கிடைக்கும்.
30.11.2024 – சனி – குச்சனூர் சனி சிறப்பு அபிஷேகம்.
2.12.2024 – திங்கள் – கார்த்திகை 3வது சோமவாரம் – சிவாலயங்களில் 108,1008 சங்காபிஷேகம்.
4.12.2024 – புதன் – சிறப்புலி நாயனார் குருபூஜை.
5.12.2024 – வியாழன் – திருவோண விரதம்.
5.12.2024 – வியாழன் – சதுர்த்தி விரதம்.
6.12.2024 – வெள்ளி – கள்ளழகர் கோயில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.