×

ஜெயதேவர்

பக்த விஜயம் பகுதி – 4

ஜெயதேவர் கை – கால்கள் வெட்டப்பட்டுப் பாழுங்கிணற்றில் இருந்தபோது, விந்திய நாட்டு அரசர் வேட்டையாட வந்தார். அவர் ஜெயதேவரைக் கண்டு, ஜெயதேவரை அரண்மனைக்குத் தூக்கிச்சென்று பாதுகாக்கத் தொடங்கினார்; குருவாகவே மதித்தார் என சென்ற இதழில் பார்த்தோம். இனி…நாள்தோறும் ஜெயதேவருக்குப் பணிவிடைகள் செய்து, அவரிடமிருந்து அருள் உபதேசங்களைக் கேட்டுவந்த மன்னர், ஒருநாள்; ‘‘சுவாமி! அடியேன் முக்திபெற வேண்டும். அதற்கான எளிமையான வழி ஒன்றை உபதேசித்து அருளுங்கள்!’’ என வேண்டினார். ஜெயதேவர் சொல்லத் தொடங்கினார்;

‘‘மன்னா! திருமாலைப் பூஜை செய்பவர்களுக்கு ஒருக்கால், மோட்சம் கிடைக்கும் என்பது சித்தியானாலும் ஆகும். ஆனால், அவர் அடியார்களை ஆராதிப்பவர்களுக்கோ, முக்தி கிடைப்பது என்பது நிச்சயம்! ஆகையால் சாதுக்கள், தெய்வத் தொண்டர்களை ஆராதிப்பதைவிடச் சிறந்த தர்மம் வேறு ஒன்றும் இல்லை. அடியார்களின் வெளி முகத் தோற்றமும் பெயரும் முக்கியமல்ல. மனத்தில் வைராக்கியம் முதலானவை அமைய வேண்டும். மிளகு மேலாகப் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருந்தாலும், அதன் உள்ளே நன்மைதரும் காரம் இருப்பதைப் போல, பரமஞானியும் இருக்க வேண்டும். ஆகவே மன்னா! இறையடியார்கள் அனைவரையும் தெய்வமாகப் பாவித்துப் பூஜை செய்!

அதாவது அவர்கள் காட்டும் நல்வழியில் நட!’’ ‘‘அரசிளங்குமரன் ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக இருந்து, தன்னையும் தன் உருவத்தையும் தன் தாய் – தந்தையரையும் மறந்திருந்தாலும்கூட, மற்றவர்கள் எல்லோரும் அவனை அரசிளங்குமரனாகவே பார்ப்பார்கள். அதுபோல, உத்தமமான ஞானிகள் சிலர், அனைத்தையும் மறந்து ஜடம்போல இருப்பார்கள். அவர்களை அவமதிக்காமல், அவர்கள் காட்டிய வழியில் நட!’’

‘‘அப்படிச் செய்தால், நீ செய்யும் செயல்கள் அனைத்திலும் ஈஸ்வரன் முன் நிற்பார். ஆகையால், நீ நாள்தோறும் அடியார்களைப் போற்றி வா!’’ என்று முடித்தார் ஜெயதேவர். அதைக் கேட்ட அரசர், அவ்வாறே செய்யத் தீர்மானித்தார். பகவான் பக்தர்களுக்கும் தேசாந்திரியாக (தல யாத்திரையாக) வரும் அடியார்களுக்கும் மிகுந்த பக்தியுடன் மிகவும் கவனமாகவும் பொறுப்போடும் வரவேற்று, அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். இது ஊரெங்கும் பரவியது.

அதே சமயம், அத்தகவலை ஏற்கனவே ஜெயதேவரின் செல்வங்களைக் கவர்ந்து கொண்டு, அவரைக் கை – கால்களை வெட்டி பாழுங்கிணற்றில் தள்ளிய தீயவர்கள் இருவரும் அறிந்தார்கள்;
‘‘ஆகா! நல்ல சந்தர்ப்பம்! இந்த நேரம் பார்த்து நாம் இருவரும் பாக வதர்களைப் போல வேடம் அணிந்து கொண்டு அரண்மனைக்குள் நுழைந்தால், ஏராளமாகச் செல்வம் பெற்று வரலாம்’’ என்று தீர்மானித்தார்கள். தீர்மானம் உடனே செயலானது. இருவரும் சாதுக்களைப் போல வேடம் அணிந்து, அடியாரோடு அடியாராக அரண்மனைக்குள் நுழைந்தார்கள். அரண்மனைக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த ஜெயதேவரைப் பார்த்தார்கள். ஜெயதேவர் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி அரண்மனைக் காவலர்கள் அவர் ஏவியதைச் செய்யத் தயார் நிலையில் இருப்பதும் தெரிந்தது.

‘‘ஆகா! இந்த ஆளைக் கையைக்காலை வெட்டிப் பாழுங்கிணற்றில் அல்லவா தள்ளினோம்! இவனுக்கு இங்கே ராஜமரியாதையுடன், உயர்ந்த இடத்தில் இருக்கிறானே! இது எப்படி? இவன் நம்மை அடையாளம் புரிந்துகொண்டால், அவ்வளவுதான்! அதே விநாடியில் நமக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்!’’ என்றெல்லாம் நினைத்து இருவரும் நடுங்கினார்கள். அவர்கள் என்னதான் முயற்சி செய்தாலும், அவர்களைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டார் ஜெயதேவர்;

‘‘இவர்கள் இருவரும்தான், நம் கை – கால்களை வெட்டிப் பாழுங்கிணற்றில் போட்டவர்கள்’’ என்பது ஜெயதேவருக்குச் சுலபமாகப் புரிந்து போனது. ஆம்! புரிந்தது, போய் விட்டது. அவர்கள் இருவரும் செய்த கொடுமையான தீச்செயலை, உடனே ஒதுக்கிவிட்டார் ஜெயதேவர்; அவருடைய கருணை மட்டுமே வெளிப்பட்டது. உடனே, தன்னைச் சுற்றியிருந்த அவ்வளவு பேர்களின் எதிரிலேயே அந்தத் தீயவர்கள் இருவரையும் அழைத்து இயன்றவரை தழுவி, தன் அருகில் இருந்த காவலர்களில் ஒருவரை அழைத்து;

‘‘இவர்கள் இருவரும் உத்தமமான பக்தர்கள். இப்படிப்பட்ட உத்தம பக்தர்கள் இதுவரை நம் அரண்மனைக்கு வந்தது இல்லை. ஆகையால், இவர்கள் இருவரையும் மன்னரிடம் அழைத்துச் சென்று, விசேஷமான மரியாதை அளிக்கச் சொல்லுங்கள்!’’ என்றார் ஜெயதேவர். அவ்வாறு சொன்னது கருணை உள்ளத்தோடுதான்! ஞானி அல்லவா? ஆகையால், இவர் (தீயவர்) களுக்கும் நாம் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு செய்தார்.

ஆனால் மாறுவேடம் கொண்ட அத்தீயவர்களோ, ‘‘இவனிடம் இருந்த ஏராளமான செல்வங்களை நாம் கவர்ந்துகொண்டு, கை-கால்களை வெட்டிப் பாழுங்கிணற்றில் தள்ளினோம். இவனோ தப்பிப்பிழைத்து, இங்கு அரண்மனையில் அரசாங்கக் காவலர்கள் சூழ, உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறான். நாம் யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டான். அதனால்தான் நமக்கு நன்றாகத் தண்டனை அளிக்க வேண்டும் என்பதைப் பூசிமெழுகிச் சொல்கிறான். என்ன ஆகப்போகிறதோ?’’ என்று பயந்து நடுங்கியபடியே காவலர்களுடன் அரசரிடம் சென்றார்கள்.

அரசரிடம் ஜெயதேவரின் கட்டளையைச் சொன்னார்கள் காவலர்கள். அரசரோ, ‘‘ஆகா! என் குருநாதரே இவ்வாறு பாராட்டிச் சொல்லியிருக்கிறார் என்றால், இவர்களின் பெருமையை நான் எவ்வாறு அளவிட முடியும்?’’ என்று உயர்வாக எண்ணி, அவர்கள் (கள்ள வேடத்தில் வந்த தீயவர்கள்) இருவரையும் உயர்ந்த ஆசனங் களில் அமரவைத்து பாதபூஜை செய்தார். ஏராளமான செல்வக் குவியல்களை வாரி வழங்கினார். என்னதான் மன்னர் ஆத்மார்த்தமாகச் செய்தாலும், கள்ளவேடம் பூண்ட கள்ளர்கள் நடுங்கினார்கள்.

அதைக் கவனிக்காத மன்னர், ‘‘நீங்கள் இருவரும் சில நாட்களாவது இங்கேயே தங்கி, என்னைப் பெருமைப் படுத்த வேண்டும்’’ என வேண்டினார். அதைக் கேட்ட தீயவர்கள், ‘‘மன்னர் சொற்படி நாம் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மன்னர் தண்டனை அளிப்பாரோ?’’ என்று பயந்து, அரண்மனையிலேயே தங்கினார்கள். அவர்கள் இருவருக்கும் ராஜ மரியாதை செய்யப்பட்டது. ராஜ உபசாரம் நடந்தாலும், நாளாக நாளாக இருவரும் உடல் மெலிந்து பலவீனம் ஆனார்கள்.

காரணம் என்ன? என்னதான் ஒரு மானைப் பக்குவமாக அன்போடு பாதுகாத்தாலும், தான் இருக்கும் இடம் புலியின் குகை என்பது மானுக்குத் தெரிந்தால் என்னவாகும்? ‘‘எந்த நேரம் புலி வருமோ? நம் கதையை முடிக்குமோ?’’ என்ற பயத்தில் மட்டுமே இருக்கும் அல்லவா?அதுபோல, ‘‘எந்த நேரம் மன்னர் நம்மைத் தண்டிப்பாரோ?’’ என்ற பயத்திலேயே தீயவர் இருவருக்கும் உடல் மெலிந்தது. அவர்கள் உடல் மெலிவுற்றதற்கான காரணம், அரசருக்குத் தெரியவில்லை. அவர் ஜெயதேவரிடம் சென்று, ‘‘குருநாதா! நீங்கள் அனுப்பிய உத்தம பாகவதர்கள் இருவரையும் நன்றாக உபசரித்து அரண்மனையிலேயே தங்கவைத்து, அவர்கள் விரும்பிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறேன்.

இருந்தாலும், அவர்கள் நாளுக்குநாள் மெலிந்து பலவீனமாகி வருகிறார்கள்’’ என்று சொல்லி முறையிட்டார். ஜெயதேவர் உடனே பதிலளித்தார்; ‘‘மன்னா! நான் அனுப்பிய அவர்கள், பரம பாகவதர்கள்; பக்தியில் சிறந்தவர்கள்; கேட்பது, தொடுவது முதலான விஷய சுகங்களையெல்லாம் வெறுத்தவர்கள். அதன் காரணமாகத்தான் அவர்கள் நாளுக்குநாள் உடல் மெலிந்து பலவீனமாகிவருகிறார்கள். அவர்களைப் போன்ற உத்தமர்கள் எந்தவோர் இடத்திலும் ஒரு கணம்கூட நிலையாக வசிக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்டவர்கள், நீ செய்த புண்ணியத்தால்தான் இவ்வளவு நாட்களாக இங்கு வசித்தார்கள். ஆகையால் இனிமேல் அவர்களை நீ இங்கேயே இருக்கும்படி வற்புறுத்தாதே! அவர்கள் விருப்பம்போல் எங்கு வேண்டுமானாலும் போகட்டும்’’ என்றார் ஜெயதேவர். அதைக் கேட்ட மன்னர், உடனே தன் இருப்பிடம் திரும்பி, கள்ளவேடதாரிகளை வணங்கி, ‘‘உத்தமர்களே! இவ்வளவு நாட்களாக அடியேன் வேண்டுகோளுக்காகத்தான், நீங்கள் இருவரும் இங்கு வசித்தீர்கள். இனி நீங்கள் உங்கள் விருப்பம்போல் போகலாம்’’ என்று பணிவோடு கூறினார். அதன்பிறகு அவர்கள் விரும்பியபடி, இரண்டு தேர்களைக் கொண்டுவரச் செய்து, அவற்றை நன்றாக அலங்கரித்து, அவற்றில் ஏராளமான நவரத்தினங்கள் முதலான செல்வங்களை எல்லாம் நிரப்பி, தன் படைவீரர்களுடன் அவர்களை வழியனுப்பி வைத்தார் மன்னர்.

‘‘அப்பாடா! தப்பித்தோம்’’ என்று நிம்மதியாகக் கள்ள வேடதாரிகள் இருவரும் தேர்களில் ஏறி அமர்ந்து, தங்கள் இருப்பிடமான காட்டிற்குப் புறப்பட்டார்கள். வழியில் படைவீரர்களில் சிலர், கள்ள வேடதாரிகளிடம், ‘‘உத்தம பாகவதர்களே! எங்கள் மன்னரின் மாளிகைக்கு இதுவரை பற்பல பாகவதர்கள் வந்திருக்கிறார்கள். அவ்வளவு பேர்களிலும் யாருக்குமே ஜெயதேவர் இப்படிப்பட்ட மரியாதைகளைச் செய்யச் சொன்னதில்லை. ஆனால் உங்கள் இருவரிடமும் அவருக்கு இருக்கும் அன்பு ஆச்சரியப்படத் தக்கதாக இருக்கிறது. என்ன காரணம் என்பதை நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும்’’ என வேண்டினார்கள். மாறுவேடம் கொண்டிருந்த கள்வர்கள் இருவரும் தைரியமாகப் பேசத் தொடங்கினார்கள்.

‘அரண்மனையை விட்டு வெளியேறிவிட்டோம். அரசரால் பிரச்னை இல்லை; இனி யாரும் நம்மைத் தண்டிக்க முடியாது. நம் இருப்பிடமான காட்டிற்குத்தான் போய்க் கொண்டிருக்கிறோம். செல்வம் வேறு ஏராளமாக இருக்கிறது’ என்ற தவறான எண்ணத்தில், அந்த இருவரும் தவறாகப் பேசத் தொடங்கினார்கள். படை வீரர்களும் ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார்கள்.
‘‘காவலர்களே! உங்கள் அரண்மனையில் இருக்கும் ஜெயதேவருக்கு எங்கள் மேல் இவ்வளவு பாசமும் பரிவும் இருக்கக் காரணம் உண்டு. அதைச் சொல்கிறோம். கேளுங்கள்! அவந்தி தேச அரசரிடம் இந்த ஜெயதேவர் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தார். நாங்கள் அங்கே சேவகர்களாக இருந்தோம். ஒருநாள், ஜெயதேவர் பெரும் குற்றம் செய்துவிட்டார். கோபம் கொண்ட மன்னர் எங்களை அழைத்து, “ஜெயதேவனைக் கொன்றுவிட்டு வாருங்கள்!’’ என்று கட்டளையிட்டார்.

‘‘நாங்களும் உடனடியாக ஜெயதேவரைக் குண்டுக்கட்டாகப் பிடித்து, காட்டிற்கு இழுத்துப்போனோம். அங்கு போனதும், எங்களுக்குக் கொஞ்சம் இரக்கம் வந்தது. அதனால் ஜெயதேவரைக் கொல்லாமல் அவர் கை – கால்களை வெட்டி, ஒரு பாழுங்கிணற்றில் வீசிவிட்டுத் திரும்பினோம். இருந்தாலும், எங்களுக்கு ஒரு பயம் இருந்தது. மன்னன் கட்டளைப்படி ஜெயதேவரைக் கொல்லாமல் விட்ட தகவலை மன்னன் அறிந்தால், எங்களைத் தண்டிப்பானே என்ற பயத்தில், நாங்கள் இருவரும் துறவிகளாகித் தேச யாத்திரை செய்து வருகின்றோம்.

‘‘அப்படி தேசயாத்திரையாக வரும்போதுதான், உங்கள் ஊருக்கும் வந்தோம். இங்கு வந்து பார்த்தால்… ஜெயதேவர் இருந்தார். இங்கு அவரும் எங்களைப் புரிந்துகொண்டுவிட்டார். அவரைக் கொல்லாமல் உயிருடன் விட்ட காரணத்தால், நன்றி மறக்காமல், நாங்கள் செய்த உதவிக்குப் பிரதி உபகாரமாக எங்களை நல்லவிதமாகக் கௌரவப்படுத்தி, எங்களுக்குச் சகல விதமான மரியாதைகளும் கிடைக்கச்செய்தார்’’ என்று நீளநெடுகச் சொல்லி முடித்தார்கள். அவர்கள் சொன்ன அந்தப் பொய்யான தகவல்களை உண்மையென்றே நம்பினார்கள் காவலர்கள்.

ஆனால் தெய்வத்தால் பொறுக்க முடியவில்லை போலும்! அதே விநாடியில் பூமியானது இரு பிரிவுகளாகப் பிறக்க, அந்த இரு தீயவர்களும் தங்கள் தேர்களுடனும் அவற்றில் இருந்த செல்வங்களுடனும் அந்தப் பிளவில் விழுந்து மறைந்தார்கள்.பார்த்துக்கொண்டிருந்த படைவீரர்களுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது; மன்னரிடம் தகவலைச் சொல்வதற்காக அவசர அவசரமாக அரண்மனை நோக்கி ஓடினார்கள்.

(விஜயம் தொடரும்)

பி.என்.பரசுராமன்

The post ஜெயதேவர் appeared first on Dinakaran.

Tags : Jayadevar ,Vindya Nadu ,Bhagtha Vijayam ,Balangintura ,Jayadeva ,
× RELATED ஜெயதேவர்