×

இதோ! வந்தேன்

16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மகான் ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. பூந்தானம் எனும் மகான் ஒருவர், கேரளாவில் வாழ்ந்துவந்தார். இவர் நாராயணீயம் எழுதிய மேப்பத்தூர் நாராயண பட்டத்திரியின் சமகாலத்தைச் சேர்ந்தவர். குருவாயூரப்பனின் தலைசிறந்த பக்தர்களில் இவரும் ஒருவர். நாள்தோறும் பாகவதம் படிக்கும் வழக்கம் கொண்டவர். தன் வாழ்நாளின் கடைசிப் பகுதியில், பூந்தானம் ஒரு நூல் எழுதி வந்தார். பகவானின் ஸ்ரீவைகுண்டத்தை அந்நூலில் வர்ணிக்க வேண்டியிருந்தது. பல வகைகளில் சிந்தித்து, ஸ்ரீவைகுண்டத்தைப் பற்றி என்னவெல்லாமோ எழுதினார்.

ஆனால் எப்படி எழுதியும் பூந்தானத்திற்குத் திருப்தி வரவில்லை. ஒருநாள் இரவில் அயர்ந்துபோய்ப் படுத்தார். அப்போது பூந்தானம் ஒரு கனவு கண்டார். ஒரு பெரும் ஆலயத்தின் முன்னால் பூந்தானம் நிற்கிறார். அந்த ஆலயத்தின் வாயிற் காவலர்கள் இருவரும் பூந்தானத்தை வணங்கி வரவேற்றார்கள்.

பூந்தானத்திற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அதைக் கண்ட வாயிற்காவலர்கள் பணிவோடு, ‘‘ஐயா! தங்கள் வீட்டின் வடக்குப் பக்கத்தில் பலகாலமாக, நாங்கள் இருவரும் பலாமரங்களாக நின்றிருந்தோம். தற்போது உங்களால்தான் விடுதலை அடைந்தோம். ‘‘தாங்கள் பாகவதம் படிப்பதைக் கேட்டுக்கேட்டே, மரங்களாக இருந்த நாங்கள் இருவரும் முக்தியடைந்து, இந்த உயர்நிலையை அடைந்தோம். வாருங்கள்!.. வாருங்கள்!’’ என்று சொல்லி உள்ளே அழைத்துப் போனார்கள். ‘‘சுவாமி! இதுதான் வைகுண்டம்’’ என்று சொல்லி, வைகுண்டத்தின் எல்லாப் பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார்கள்.

அங்கிருந்த முக்தர்கள், பூந்தானத்திடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்கள். ‘‘சுவாமி! தாங்கள் பாகவதம் படிக்க வேண்டும்!’’ என்றார்கள். அன்று காலை முடித்திருந்த பாகவதப் பகுதியின் அடுத்த பகுதியைப் படித்து விளக்கினார் பூந்தானம். அனைவரும் கேட்டு மகிழ்ந்தார்கள். கனவு கலைந்தது. பூந்தானம் மகிழ்ந்தார்.

வைகுண்ட தரிசனம் என்றால் சுலபத்தில் கிடைக்கக்கூடியதா? கனவாக இருந்தாலும் தரிசனம் தரிசனம்தானே? கனவு கலைந்த பூந்தானம், எல்லையில்லாத ஆனந்தத்துடன், வீட்டின் வடக்குப் பக்கம் சென்று பார்த்தார். இரவு வீசிய பெருங்காற்றால், அங்கிருந்த பலாமரங்கள் இரண்டும் வேரோடு சாய்ந்து விழுந்து கிடந்தன!

கனவில் கண்டது அப்படியே நடந்திருப்பது கண்டு, பரவசப்பட்டார் பூந்தானம். காலை வழிபாட்டை முடித்து, வழக்கப்படி படிக்கும் பாகவத நூலை எடுத்துப் பிரித்தார். அன்றன்று படித்து முடித்ததும், நாளை படிக்க வேண்டிய பகுதியில் அடையாளம் வைப்பது பூந்தானத்தின் வழக்கம். அதன்படி நூலைப் பிரித்துப் படிக்க வேண்டிய இடத்தைப் பார்த்தார். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக, நூலில் வைக்கப் பட்டிருந்த அடையாளம், இரண்டு பகுதிகள் (அத்தியாயங்கள்) முன்பாக வைக்கப் பட்டிருந்தன.

அந்த இடத்திலிருந்து படித்தார் பூந்தானம். அவருக்கு ஆச்சரியம் அதிகமானது.காரணம்? பூந்தானம் கனவில் கண்ட வைகுண்டம், அப்படியே வர்ணிக்கப்பட்டிருந்தது. ஒருநாள்… பூந்தானத்தின் கனவில், விஷ்ணுதூதர் ஒருவர் காட்சியளித்து, ‘‘நாளை உன்னைத் தன்னிடம் அழைத்துச் செல்ல, மகாவிஷ்ணுவே இங்கு எழுந்தருளுவார்’’ என்று சொல்லி மறைந்தார். பூந்தானம் விழித்துக் கொண்டார்; ‘‘பிறவிப் பயனே கிடைத்தது எனக்கு’’ என்று குதித்தார். அதிகாலையில் நீராடி, விசேஷமான பூஜைகளைச் செய்தார்; பாராயணங்களை முடித்தார்; அனைவர்க்கும் அன்னதானம் செய்தார்; வீடெங்கும் மாவிலைத் தோரணங்கள் கட்டி, மலர் மாலைகளைத் தொங்கவிட்டு அழகாக அலங்காரங்கள் செய்தார்.

அழகாகக் கோலங்கள் இட்டார்; விளக்கேற்றி வைத்து, நைவேத்தியங்களையும் தயார்செய்து வைத்தார். அதே நேரம் வாசலில் பாஞ்சஜன்ய சங்கநாதம் கேட்டது. ஓடிப்போன பூந்தானம், அங்கே மகாவிஷ்ணுவைக் கண்டார். பரபரப்போடு வணங்கி, மகாவிஷ்ணுவின் கை – கால்களை அலம்ப நீர் அளித்தார். அதன்பின் பகவானை ஒரு மங்கலகரமான ஆசனத்தில் அமர வைத்து, அவர் முன்னால் ஒரு பெரிய வாழை இலையைப் போட்டு, அதில் எல்லா உணவு வகைகளையும் பரிமாறி, ‘‘தாங்கள் இவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்!’’ என்று வேண்டினார் பூந்தானம்.

அதைப் பார்த்த பூந்தானத்தின் மனைவியும் மற்றவர்களும், ‘‘பாவம்! இவர் ஏற்கனவே அரைக்கிறுக்கு! இப்போது பைத்தியம் முற்றிப்போய்விட்டது’’ என்று கேலி செய்தார்கள். அவர்களுக்குப் பூந்தானத்தின் செய்கைகள்தான் தெரிந்தனவே தவிர, அவர்கள் கண்களுக்குப் பகவான் தெரியவில்லை. அதனால்தான் அவ்வாறு கேலி பேசினார்கள். நல்வினைப் பயன் இல்லாதவர்களால் தெய்வத்தை அனுபவிக்க முடியுமா என்ன?. அவர்கள் பேசிய கேலிகளையெல்லாம் பூந்தானம் பொருட்படுத்தவில்லை.

பகவானை உபசரிப்பதிலேயே இருந்தார். அதற்குள் உணவுண்டு முடித்த பகவான் கையசைத்தார். உடனே ஆகாயத்தில் இருந்து விமானம் ஒன்று இறங்குவது, பூந்தானத்தின் கண்களுக்கு மட்டும் தெரிந்தது. பகவான், பூந்தானத்தின் கையைப் பிடித்து, விமானத்தில் ஏற்றினார். விமானம் புறப்படத் தயாரானது. அப்போது பூந்தானம் தன்னைச் சுட்டிக் காட்டி, ‘‘இந்த அடியவன் பகவான் கருணையால் வைகுண்டம் போகிறான். யாராவது இவனுடன் வைகுண்டம் வர விரும்பினால் வரலாம்’’ என்று உரக்கக் கூவினார்.

அவருக்கு மிகவும் அருகாக இருந்த பூந்தானத்தின் மனைவி, ‘‘இவருக்குப் பைத்தியம் தெளியாது போலிருக்கிறதே!’’ என்று கதறி அழத் தொடங்கினாள். அதே சமயம், பூந்தானத்தின் வீட்டுவேலைக்காரி, ‘‘இதோ! நான் வந்தேன்’’ என விமானத்தை நோக்கி ஓடினாள். ‘‘வா! விரைவாக’’ என்றார் பூந்தானம். ஒருசில விநாடிகள்தான்! வேலைக் காரியின் உயிரற்ற உடல், அப்படியே தரையில் சாய்ந்தது. அவள் ஆன்மா பூந்தானத்துடன் விமானத்தில் பறந்தது. பூந்தானம் உடலோடு வைகுண்டம் சென்றதாக வரலாறு கூறுகிறது. யார் யாருக்கு எதை, எப்போது, எப்படிக் கொடுக்க வேண்டும் என்பது தெய்வத்திற்குத் தெரியும்.

V.R.சுந்தரி

The post இதோ! வந்தேன் appeared first on Dinakaran.

Tags : Poonnam ,Kerala ,Maepathur Narayana Pathri ,Narayaniyam ,GURUVAYURAPPAN ,
× RELATED கேரளாவில் பங்குதாரருடன் தகாத உறவு என...