பீமா நதிக்கரையில் கோமாபாய் என்ற பெண் நின்று கொண்டிருந்தாள். மறுநாள் ஏகாதசி; அதற்கு மறுநாள் துவாதசி; அந்த இரண்டு நாட்களிலும் பண்டரிபுரத்தில் இருந்து, பாண்டுரங்கனைத் தரிசிக்க வேண்டும் என்பது அவள் ஆசை. அதற்காகத்தான் அவள் அங்கு வந்தாள். ஆனால் நதியைக்கடந்து அக்கரைக்குப்போக அவளுக்கு வழிதெரியவில்லை. அவளிடம் ஒரு காசுகூட இல்லை; கிழிந்த புடவையில் சிறிதளவு பச்சை மாவு மட்டும் வைத்திருந்தாள். நதியைக்கடந்து அக்கரைக்குப் போக வேண்டுமானால், ஓடக்காரருக்குக் காசு கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் நீந்தித்தான் போக வேண்டும். நீந்தக்கூடிய அளவிற்குக் கோமாபாயின் உடலில் பலம் இல்லை. அதனால், அவள் அங்கிருந்த ஓடக்காரர்களை நெருங்கித் தன் விருப்பத்தையும், கையில் காசு இல்லை என்பதையும் சொல்லி, ‘‘தயவு செய்து என்னை அக்கரையில் கொண்டு விடுங்கள்!’’ எனக் கெஞ்சினாள்.
ஓடக்காரர்களோ, பரிகாசமாகப் பேசினார்கள்; ‘‘காசு தர வழியில்ல. இதுல பண்டரிபுரம் கேக்குதாக்கும் ஒனக்கு!’’ என்று கேலி செய்தார்கள். யாரும் இவளை ஏற்றிகொள்ளத் தயாராக இல்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது. கோமாபாய் தன் நிலையைப் பண்டரிநாதனிடம் சொல்லி, வாய்விட்டு அழுதாள். அந்த நேரத்தில் ஓடக்காரர் வடிவில் பண்டரிநாதனே கோமாபாயிடம் வந்தார்; ‘‘அம்மா! நீ வா! உன்னைக் கொண்டுபோய் அக்கரையில் சேர்க்கிறேன் நான்’’ என்றார்.
‘‘பிறவிப் பெருங்கடலைத் தாண்டி முக்திக் கரையிலேயே சேர்க்கும் பகவான், பீமாநதியைக் கடந்து நான் பண்டரிபுரம் செல்வதற்காக, உங்களை அனுப்பி வைத்ததைப் போல இருக்கிறது’’ என்று மனதார ஓடக்காரரை வாழ்த்திய கோமாபாய், ஓடத்தில் ஏறினாள். ஓடம் அக்கரையை அடைந்ததும், ‘‘ஓடக்காரரே! என் கையில் காசில்லை. கொஞ்சம் பச்சை மாவு தருகிறேன்’’ என்று சொல்லியவாறே, தன் புடவையில் இருந்த மாவைப் பிரித்தாள்; பிரித்த பின் நிமிர்ந்து பார்த்தால்… ஓடக்காரரைக் காணோம்; அவர் ஓட்டி வந்த ஓடத்தையும் காணோம். பண்டரிநாதனின் லீலை இது என எண்ணிய கோமாபாய், நதியில் நீராடிப் பண்டரிநாதனைத் தரிசித்து, பாகவதர்களுடன் சேர்ந்து பகவான் நாமம் பாடி, ஏகாதசி நாள் முழுவதையும் கழித்தாள்.
மறுநாள் துவாதசி! யாராவது ஒருவருக்கு உணவு அளித்த பிறகுதான் கோமாபாய் சாப்பிட வேண்டும். அவள் தன்னிடமிருந்த சிறிதளவு மாவில், சில ரொட்டிகளைத் தயாரித்து வைத்தாள். பண்டரிபுரத்தில் உள்ள அன்னதானக் கூடங்களில் எல்லாம் கூட்டம் நிறைந்திருந்தது. அந்த நிலையில் ஏழைப் பெண்ணான கோமாபாய் கொடுக்கும் வறண்டுபோன ரொட்டியை வாங்கிச் சாப்பிட, யார் முன் வருவார்கள்? சோர்ந்து போனாள் கோமாபாய்; வழக்கப்படி மறுபடியும் பண்டரிநாதனை எண்ணி, மனமுருகி வேண்டினாள். பண்டரிநாதனே வேதியர் வடிவில், கோமாபாய் இருக்கும் இடத்தைத் தேடி வந்தார். மகிழ்ச்சி அடைந்த கோமாபாய், சில ரொட்டிகளை வேதியர் கையில் அளித்தாள். சில நொடிகளில் ‘‘வேதியரின் மனைவி நான்’’ என்று கூறியபடியே பண்டரிநாதன் தேவியும் அங்கு வந்தார்.
அவர் கைகளிலும் சில ரொட்டிகளை அளித்தாள் கோமாபாய். அவற்றை வாங்கிய தேவி, அங்கேயே அவற்றைச் சாப்பிட்டார். ‘‘ஆகா! துவாதசி பாரணை இன்று பண்டரிபுரத்தில் அற்புதமாக நடந்தது. பண்டரிநாதா!’’ எனக் கூவியபடியே, கைகளைக் குவித்தாள் கோமாபாய். அதே விநாடியில் எதிரில் இருந்த வேதியரும் அவர் மறைந்தார்கள். அங்கே பண்டரிநாதனும் அவர் தேவியும் தரிசனம் தந்தார்கள். தெய்வத்தை நேருக்குநேராகத் தரிசித்த கோமாபாய்க்கு, எல்லை இல்லாத மகிழ்ச்சி உண்டானது.
நல்லதை நினைத்துச் செயல்படுவதுதான் நம் பொறுப்பு. அதைத் தடங்கல் இல்லாமல் தெய்வம் நிறைவேற்றி வைக்கும். நம்மைத்தேடி வந்து உதவி கேட்பவர் ஒவ்வொருவரும் தெய்வங்களே; அவர் உடைகளையோ தோற்றத்தையோ வைத்து எடை போடக் கூடாது. நம்மால் இயன்றதை அவர்களுக்கு உதவ வேண்டும். தெய்வமே நம்மைத் தேடிவந்து அருள் புரியும் – என்பதை விளக்கும் கதை இது.
V.R.சுந்தரி
The post பக்தருக்காக நேரில் வந்த பண்டரிநாதன் appeared first on Dinakaran.