சிலருடைய இல்லங்களுக்குச் செல்லும் பொழுது, அந்த இல்லத்தின் அகச் சூழலையும் புறச் சூழலையும் கவனிப்பேன். அது எனக்குப் பல்வேறு உண்மைகளைத் தெரிய வைக்கும். அப்படிப்பட்ட சில விஷயங்களை நான் என்னுடைய நண்பர்கள், வேண்டியவர்களிடம் பகிர்ந்துகொள்வேன். அதில் ஒரு உண்மையை இப்பொழுது உங்களிடமும் பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். நம் வீட்டின் சூழல்கள், பொருட்கள் வைக்கும் முறை, வீட்டில் நம்முடைய நடத்தை, நம்முடைய வாழ்க்கையின் வெற்றியையோ தோல்வியையோ பிரதிபலிக்கும் குறியீடுகள் என்பதை நாம் நினைத்துப் பார்த்ததில்லை. சில விஷயங்களை “இதெல்லாம் ஒரு காரணமா?” என்று அலட்சியமாக நினைப்போம். ஆனால், அவை நேரடிக் காரணங்களாக இல்லாமல் போனாலும், நமது தோல்விக்கான அல்லது அதிருப்திக்கான அல்லது சந்தோஷம் இன்மைக்கான காரணத்தின் குறியீடுகளாக இருக்கும். உதாரணமாக, சிலருடைய வீட்டில் நாள்காட்டிகளை மாட்டி வைத்திருப்பார்கள். ஒன்றுக்கு மூன்று நாள்காட்டிகள் இருக்கும். அந்த நாள் காட்டிகளைப் பார்த்தால் ஹாலில் ஒவ்வொரு மூலையில் தொங்கிக் கொண்டிருக்கும். ஆனால், அதன் தேதிகள் மாற்றப்படாமல் இருக்கும்.
ஒன்று சென்ற மாதத்தைக் காண்பிக்கும். இன்னொரு நாள் காட்டி சென்ற வாரத்தின் ஏதாவது ஒரு தேதியைக் காண்பிக்கும். எதுவும் சரியான தேதியைக் காண்பிக்காது. காரணத்தைக் கேட்டால், நாள் காட்டியின் அந்தந்த தினத்துக்குரிய தாளைக் கிழிப்பதற்கு நேரம் இல்லை (இதற்கெல்லாம் ஏது சார் நேரம்?) என்று சொல்லுவார்கள். அந்தத் தாளைக் கிழிப்பதற்கு இரண்டு வினாடிகள்கூட ஆகாது. இரண்டு வினாடிகள்கூட செலவழிக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருப்பவர்கள், ஒவ்வொரு நாளைக்கும் பல கோடிகள் சம்பாதிக்க வேண்டும் அல்லவா! ஆனால், பெரும்பாலும் இப்படிப்பட்ட வீடுகளில் ஏதோ ஒரு விதத்தில் பொருள் வரத்து குறைவாக இருக்கும். காரணம், இவர்களின் சோம்பேறித்தனம். செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வதில் கவனமில்லாமல் இருப்பதும், அவசியமில்லாத காரியத்தை வேக வேகமாகச் செய்வதும் பழக்கமாக இருக்கும். எதில் பிஸியாக இருக்க வேண்டுமோ, அதில் பிஸியாக இருக்க மாட்டார்கள். அதன் எதிரொலிதான் இந்தக் காலண்டர் தாள்கள் மாற்றப்படாமல் இருப்பது. நான் ஒரு முறை கேட்டேன்; “இத்தனை காலண்டரை ஏன் ஒரே இடத்தில் மாட்டி வைத்திருக்கிறீர்கள்? யாருக்காவது தரலாமே?” அதற்கு அவர்; “யாராவது கேட்டால் தரலாம்.
தேடிப் போய்த் தருகின்ற அளவுக்கு நேரமில்லை’’ B8Eன்றார். அதைப் போலவே இன்னொரு விஷயத்தையும் கவனிக்கலாம். பெரும்பாலோர் வீடுகளில் பேட்டரியில் ஓடும் சுவர்கடிகாரங்கள் மாட்டி வைத்திருப்பார்கள். ஆனால் காலண்டரைப் போலவே அதுவும் தவறான நேரத்தைக் காண்பிக்கும். அந்த கடிகாரத்திற்கு ஒரு பத்து ரூபாய் பேட்டரி வாங்கி போடுவதற்கான அவகாசம் அவர்களுக்கு இருக்காது.
ஆயினும் அவர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். கடிகாரம் தவறான நேரத்தைக் காண்பிக்கும் என்றால் என்ன பொருள்? அது நமக்கான நேரத்தை காண்பிக்கவில்லை.காண்பித்தாலும் தவறாகக் காண்பிக்கிறது என்று பொருள். நமக்கான நேரம் சரியில்லை என்று பொருள். சரி நமக்கான நேரத்தை யார் சரி செய்வது? நாம் தானே சரி செய்ய வேண்டும்? எப்படிச் சரி செய்யலாம்? அந்தக் கடிகாரத்தை நன்கு துடைத்து, பேட்டரி போட்டு, நேரத்தைச் சரி செய்து மாட்டி வைத்தால், அதற்குப் பிறகு அது சரியான நேரத்தைக் காண்பிக்கத்தானே செய்யும். அதைப் போல, நம்முடைய நேரத்தை நாம் மாற்றி அமைத்துக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டால், நிச்சயம் நம்முடைய நேரம் சரியான நேரமாகத் தானே இருக்கும்.
மூன்றாவதாக ஒரு விஷயமும் இருக்கிறது. சிலருடைய வீட்டில், ஆங் காங்கே வாஷ்பேசின் மற்றும் பாத்ரூம் குழாய்கள் இருக்கும். அந்தக் குழாய்களிலும் சரி, அந்தக் குழாயில் இருந்து வெளியேறும் மற்ற பைப்புகளிலும் சரி, நீர்க்கசிவுகள் (leakage) இருந்து கொண்டே இருக்கும். டேப்பை மாற்ற மாட்டார்கள் அல்லது சரியாக மூட மாட்டார்கள். வெளிப்புற பைப்புகளில், ஆங்காங்கே உடைந்து தண்ணீர் தேங்கிக் கொண்டிருக்கும். இப்படி இருந்தாலும், அந்த வீட்டில்செல்வம் நிலைக்காது. இப்படிப்பட்டவர்கள், வரவைவிட செலவு அதிகமாக செய்பவர்களாக இருப்பார்கள். சேமிப்பு என்பது இல்லாமல் இருக்கும். இது அந்த வீட்டில் செல்வம் தங்காமல் இருக்கும். நடத்தையைக் காட்டும் ஒரு குறியீடு. அது மட்டும் அல்ல, இது வேறு ஒன்றையும் சுட்டிக்காட்டுகிறது. எதற்குச் செலவழிக்க வேண்டுமோ, அதைவிட தேவையில்லாத விஷயங்களுக்குச் செலவழிப்பதையும், மூடப்படாத, கவனிக்கப்படாத நீர்க் கசிவு உள்ள பைப்புகளும் டேப்புகளும் காட்டுகின்றன.இது சாதாரண விஷயம்தான் என்று தள்ளிவிட முடியாது. இதே அலட்சியம்தான் வேறு செயல்களைச் செய்யும் பொழுதும், சம்பாதிக்கின்ற பணத்தைச் செலவழிக்கும் பொழுதும் இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
நம்முடைய நடத்தை (attitude) என்பது வெளிப்புறம் உள்ள நிகழ்வுகளைத் தீர்மானிக்கின்றன. ‘‘நேரமில்லை. ஆள் இல்லை’’ என்று ஏதாவது ஒரு காரணத்தைச்சொல்வார்கள். கவனம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்னொரு விஷயத்தையும் நமக்குக் காண்பிக்கிறது. அதாவது, தவறுகளைச் சுட்டிக் காட்டுகின்ற பொழுது அல்லது கண்ணில் படுகின்ற பொழுது அதை நீக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம் இல்லாமையையும் இதுகாட்டுகின்றது.இதைவிட இன்னொரு விஷயத்தையும் சொல்லுகின்றேன். இப்பொழுது பெரும்பாலோர் வீட்டில், சமைத்து சாப்பிடுவதில்லை. பெரும்பாலும் அவர்கள் வெளியிலே ஹோட்டல்களில்தான் சாப்பிடுகிறார்கள். அதுகூட ஒரு வகையில் பரவாயில்லை. அதைவிட இன்னும் மோசம், பெரும்பாலோர் ஹோட்டலில் இருந்து வரவழைத்துச் சாப்பிடுகின்றார்கள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் முடியாத பொழுது இப்படிச் செய்வதுதவறில்லை. ஆனால், எப்பொழுதாவது ஒரு தரம் சமைக்காமல் இருப்பது என்ற நிலைமாறி, எப்பொழுதாவது ஒருதரம்தான் சமைப்பது என்று ஆகிப்போய்விட்டது. சரி அதுகூட பரவாயில்லை… இப்படிச் சாப்பிட்ட உணவின் மீதியையும், வாங்கி வருகின்ற சட்னி, சாம்பார் முதலிய பாக்கெட்டையும் அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டு வைப்பார்கள். சிலர் முழு பாக்கெட்டையும் பிரிக்காமலேயே போட்டுவிடுவது உண்டு. இதுவும் ஒரு தாரித்திரியத்தின் அடையாளம்தான். இதை நீண்ட காலம் கடைப்பிடிக்கின்ற பொழுது, உங்களுடைய இரண்டு செல்வம் கண்ணுக்குத் தெரியாமல் பறிபோய் இருக்கும்.
1. பணம் (wealth)
2. ஆரோக்கியம் (health)
முதல் விஷயத்தைத் திரும்பச் சம்பாதித்துவிடலாம். ஆனால் இழந்து போன ஆரோக்கியத்தை எப்படி சம்பாதிப்பது? எனவே, இந்த நான்கு விஷயங்களையும் கவனித்துச் செயல்படுங்கள். இது உலகியல் தானே, இதற்கும் ஆன்மிகத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். ஆன்மிகம் நமது நடத்தையை நேராக்கித் தருகிறது. அந்த நடத்தை நமது வாழ்வை சீராக்கித் தருகிறது. நம் இல்லத்துக்கு, மகாலட்சுமி வருவது இருக்கட்டும். வந்த மகாலட்சுமியை, நம் செயல்களால் “போ” என்று அனுப்பிவிடாதீர்கள்.
தேஜஸ்வி
The post மகாலட்சுமியை “போ” என்று அனுப்பிவிடாதீர்கள் appeared first on Dinakaran.