ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது 2 பா.ஜ. நிர்வாகிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான 2 பாஜ நிர்வாகிகளின் ஜாமீன் மனுவை மயிலாடுதுறை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடத்தின் 27வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி அவரது சகோதரரும், உதவியாளருமான விருத்தகிரி, மயிலாடுதுறை எஸ்பி அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி புகார் மனு அளித்தார்.

இதுதொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், செம்பனார்கோயில் கலைமகள் கல்வி நிலைய தாளாளர் குடியரசு, தஞ்சை வடக்கு மாவட்ட பாஜ பொதுச்செயலாளர் வினோத், சீர்காழி பாஜ முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், ஸ்ரீ நிவாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாஜ மாவட்ட தலைவர் அகோரத்தை மும்பையில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் அகோரம், குடியரசு ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் விக்னேஷ், வினோத் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி விஜயகுமாரி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது 2 பா.ஜ. நிர்வாகிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: