பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, ராகுலின் பிரசாரம் குறித்து புகார், பா.ஜ – காங்கிரசுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி, 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க கெடு

புதுடெல்லி: தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை பற்றி விமர்சித்து பேசியது குறித்த புகார்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் பா.ஜ, காங்கிரஸ் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 29ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கட்சிகளுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையோடு நிறைவடைந்தன. இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நான்கு நாட்களாக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு அவதூறு கருத்துகளை தெரிவித்தார். குறிப்பாக, ‘‘நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. உங்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்று கொள்ளும் முஸ்லிம்களுக்கும் பகிர்ந்து கொடுக்க போகிறார்கள்.

பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க போகிறார்கள். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு மத ரீதியாக களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியிருந்தார். மோடியின் வெறுப்பு பிரசாரத்தை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது’ என்று எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

வெறுப்பை தூண்டும் விதமாக பேசிய பிரதமர் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் ராகுல் காந்தி கேரளாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற கொள்கையை அமல்படுத்த பிரதமர் மோடி முயற்சிப்பதாக குற்றம்சாட்டி பேசியது குறித்து பாஜ தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்ததாகக் கூறப்படும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். மதம், சாதி, சமூகம் அல்லது மொழி அடிப்படையில் வெறுப்பு மற்றும் பிரிவினையை ஏற்படுத்துவதாக பா.ஜ., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஆணையத்தின் முன்னிலையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தனர்.

அதனை ஆய்வு செய்த பின்னர் தான் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த விவகாரத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 77ஐ நாங்கள் செயல்படுத்துகிறோம். எனவே, நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சுக்கு கட்சித் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும். அதன்படி முதற்கட்டமாக, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் குற்றச்சாட்டுகளுக்கு பாஜ தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்குள் பதிலளிக்க வேண்டும்.

தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் நடத்தைக்கு அந்தந்த கட்சித் தலைமையே பொறுப்பேற்க வேண்டும். இதனை அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரசார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் பொறுப்புணர்ந்தும் பேசவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக விதிமீறி பிரசாரம் செய்ததாக யார் மீது புகார் வந்தாலும், அந்த தலைவருக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பது வழக்கம். ஆனால், பிரதமர் மோடி மீதான புகார் என்பதால், அவருக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்பாமல் பாஜ தலைவர் நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, இந்த விவகாரத்தை மடைமாற்ற ராகுலின் பேச்சுக்காக காங்கிரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

*மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு தைரியம் இல்லை: காங்கிரஸ்
பிரதமர் மோடிக்கு எதிரான புகார்கள் வரும்போது தேர்தல் ஆணையம் மிக, மிக எச்சரிக்கையாக அதை அணுகுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. பிரதமர் மோடி பேச்சு குறித்து தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு பா.ஜவுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘ பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தோம். பிரதமரின் மொழி, நடத்தை விதிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

ஆனால் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சில வேட்பாளர்கள் வாக்குகளுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். எங்களுக்கு வந்த நோட்டீசுக்கு நாங்கள் பதிலளிப்போம். பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு பதில் பாஜ தலைவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதற்காக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது என்பதையும் பார்க்க வேண்டும்.

முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்மராவ், வாஜ்பாய் , மன்மோகன் சிங் ஆகியோர் மீது புகார் எதுவும் இல்லை. ஆனால் பிரதமர் மோடிக்கு எதிராக நாங்கள் இரண்டாவது முறையாக புகார் அளித்துள்ளோம். உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது நாங்கள் முன்பு புகார் செய்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எடுக்கப்பட்டது. அசாம் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்வேறு தரப்பினர் அளிக்கும் புகார்களை தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி பரிசீலித்து, நோட்டீஸ் தேவைப்படும் இடங்களில் அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

பிரதமருக்கு நோட்டீஸ் கொடுக்கும் விவகாரத்தில் பிரதமர் என்று வரும்போது தேர்தல் ஆணையம் மிக மிக ஜாக்கிரதையாக அணுகுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று வரும் போது மிகவும் ஜாக்கிரதையாக அணுகுகிறது’ என்றார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டினை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர், “தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க.வின் பி டீமாக மாற்றிவிட்டார்கள். மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு தைரியம் இல்லை. மோடிக்கு பதில் பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பியதால் ஆணையம் நடுநிலைமையாக செயல்படவில்லை என்பது உறுதி ஆகியுள்ளது,”என்றார்.

* மோடி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்
ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில்,’ பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். தேர்தலில் தோல்வி அடைவோம் என்பது தெரிய வந்ததால் பிரதமர் மோடி கவலையடைந்து இதுபோன்று பேசுகிறார்’ என்றார்.

The post பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, ராகுலின் பிரசாரம் குறித்து புகார், பா.ஜ – காங்கிரசுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி, 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க கெடு appeared first on Dinakaran.

Related Stories: