சுற்றுலா பயணிகளின் வசதிக்காக; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு!

திண்டுக்கல்: சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோடை விடுமுறையை குதூகலமாக கழிக்க ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் கோடை வெயில் அதிகமாக இருப்பதால், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

எனவே கார், வேன், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் சிலர் வருகின்றனர். மேலும் சிலர் வெளியூர்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயிலில் வந்து பின்னர், பஸ்களில் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டி இருக்கிறது. எனவே பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு இன்று (05.05.2024) முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி அதிகாலை 4 மணி, 5.15 மணி, காலை 6.45 மணி, 7.30 மணி ஆகிய நேரங்களில் ரயில் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு கட்டணமாக ரயில் நிலையத்தில் இருந்து ரூ.95-ம், பஸ் நிலையத்தில் இருந்து ரூ.85-ம் வசூலிக்கப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி கொண்டு கொடைக்கானலை சுற்றி பார்த்து மகிழலாம் என்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

 

The post சுற்றுலா பயணிகளின் வசதிக்காக; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு! appeared first on Dinakaran.

Related Stories: