மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி

புதுடெல்லி: பிரதமர் மோடியை அதிகாரம் சூழ்ந்துள்ளது. சுற்றி இருப்பவர்கள் அவரைக் கண்டு பயப்படுகிறார்கள். அவருக்கு எதிராக யாராவது குரல் எழுப்பினாலும் அந்தக் குரல் அடக்கப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியது: “பிரதமர் மோடி எனது சகோதரனை இளவரசர் என்று அழைக்கிறார். ஆனால், காங்கிரஸ் எம்.பி ராகுல் 4,000 கி.மீ நடைப்பயணம் சென்று மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை கேட்டறிந்தார்.

இதை உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி எனும் பேரரசரோ அரண்மனைகளில் வசிக்கிறார். நீங்கள் அவரை டிவியில் பார்த்தீர்களா? அவரது முகம் பளிச்சென்று இருக்கிறது. அவரது வெள்ளை குர்தா ஒரு கறை கூட இல்லாமல் உள்ளது. அவரால் எப்படி சாமானியர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்து கொள்ள முடியும்? எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்து விட்டது. இதெல்லாம் மோடிஜிக்கு புரியாது. பிரதமர் மோடியை அதிகாரம் சூழ்ந்துள்ளது. அனைவரும் அவரைக் கண்டு பயப்படுகிறார்கள். அவருக்கு எதிராக யாராவது குரல் எழுப்பினாலும் அந்தக் குரல் அடக்கப்படுகிறது. குஜராத் மக்கள் பிரதமர் மோடிக்கு மரியாதையையும், அதிகாரத்தையும் கொடுத்துள்ளனர். நீங்கள் அவரை பெரிய தலைவர்களுடன் பார்த்திருப்பீர்கள். ஆனால், பல நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், பிரதமர் மோடி அவர்களை சந்திக்க செல்லவில்லை. தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து தேர்தலுக்காக விவசாய சட்டங்களை ரத்து செய்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உங்களுக்கு உரிமைகள் கிடைக்கும். வாக்களிப்பது மிகப் பெரிய உரிமை ஆனால், பாஜக அரசியல் சட்டத்தை மாற்ற விரும்புகிறது. அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று பாஜகவினர் கூறும்போது, ​​மக்களிடமிருந்து அவர்களின் உரிமைகளைப் பறிக்க நினைக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. உலகின் தலைசிறந்த ஆளுமையாக விளங்கிய மகாத்மா காந்திஜி குஜராத் மண்ணில் பிறந்தவர். ஸ்ரீ சர்தார் படேல் உள்ளிட்ட பல பெரிய மனிதர்களும் குஜராத் மண்ணில் பிறந்தவர்கள்தான்” என்றார். முன்னதாக, “பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரை இந்தியாவின் பிரதமராக்க விரும்புகிறார்கள்” என்று ராகுல் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி appeared first on Dinakaran.

Related Stories: