இடைப்பாடி அருகே பயங்கரம் விவசாயி திருப்புளியால் குத்திக்கொலை

*வழித்தட பிரச்னையில் தம்பி தீர்த்துக்கட்டினார்

சேலம் : இடைப்பாடி அருகே வழித்தட பிரச்னையில் விவசாயி திருப்புளியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் ஈடுபட்ட தம்பி, அவரது மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள இருப்பாளி செவடனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (50) விவசாயி. இவரது சித்தப்பா மாதையன் மகன் முருகன் (39). இவர்கள் இருவருக்கும் அந்தப்பகுதியில் தலா 80 சென்டில் விவசாய நிலம் உள்ளது. இதில், கோவிந்தனின் நிலத்திற்கு முருகனின் நிலம் வழியாக செல்ல வேண்டியுள்ளது. அதன்படி கோவிந்தன் சென்று வந்தநிலையில், சமீபத்தில் அந்த வழிப்பாதையில் கம்பி வேலி போட்டு முருகன் அடைத்துள்ளார். இதனால், கோவிந்தன், முருகன் இடையே வழித்தட பிரச்னை ஏற்பட்டு, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.

நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோவிந்தன், தனது 17 வயது மகனுடன் முருகனின் வீட்டிற்கு சென்று, தகராறு செய்தார். அப்போது ஆஸ்பட்டாஷ் கூரையை உடைத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த முருகன், அவரது மனைவி அதிர்தவள்ளி, 16 வயது மகன் ஆகியோர் கோவிந்தனையும், அவரது மகனையும் தாக்கியுள்ளனர். வீட்டில் இருந்த திருப்புளியை எடுத்து வந்த முருகன், கோவிந்தனை சரமாரியாக குத்தினார். மார்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். கோவிந்தனின் 17 வயது மகனுக்கும் முதுகில் திருப்புளி குத்து விழுந்தது. அவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்த தகராறு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

அவர்கள், கோவிந்தன், அவரது மகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிந்தனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி கோவிந்தன் உயிரிழந்தார். காயமடைந்த கோவிந்தனின் மகனுக்கு இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தாக்குதலில் காயமடைந்த முருகனின் மனைவி அதிர்தவள்ளியும் இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இக்கொலை பற்றி தகவல் அறிந்த சங்ககிரி டிஎஸ்பி ராஜா, பூலாம்பட்டி இன்ஸ்பெக்டர் (பொ) சுமித்ரா தலைமையிலான போலீசார், இருப்பாளி செவடனூருக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து கொலையுண்ட கோவிந்தன் சடலத்தை கைப்பற்றி, பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இக்கொலையில் ஈடுபட்ட முருகன், அவரது 16 வயது மகனை பூலாம்பட்டி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். முருகனிடன் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. சித்தப்பா, பெரியப்பா மகன்களான கோவிந்தனும், முருகனும் 1.60 ஏக்கர் நிலத்தை வாங்கி 2 பங்காக (தலா 80சென்ட்) பிரித்துக்கொண்டுள்ளனர்.

இதில், கோவிந்தனின் நிலத்திற்கு முருகனின் நிலம் வழியே செல்ல வேண்டியுள்ளது. இதற்காக முக்கால் சென்ட் நிலத்தை வழித்தடமாக பயன்படுத்தியுள்ளனர். முருகனின் தந்தை மாதையன், அந்த வழித்தடத்தை கோவிந்தன் பயன்படுத்த எவ்வித பிரச்னையும் செய்யாமல் இருந்துள்ளார். ஆனால், 2 ஆண்டுக்கு முன்பு கோவிந்தனுக்கும், முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் வழித்தடத்தை கம்பி வேலி போட்டு அடைத்துள்ளார்.

அதனால், பிரச்னை பெரிதாகி கடந்த 2021ம் ஆண்டு அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பூலாம்பட்டி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து வழித்தட பிரச்னை இருந்த நிலையில் நேற்று கோவிந்தனை அவரது சித்தப்பா மகனான தம்பி முருகன், திருப்புளியால் குத்திக் கொலை செய்துள்ளார், என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post இடைப்பாடி அருகே பயங்கரம் விவசாயி திருப்புளியால் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: