அரிசிக்கொம்பன் அச்சுறுத்தி வரும் நிலையில் வருசநாடு, மேகமலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்

* மலைக்கிராம மக்கள், விவசாயிகள் அச்சம்
* கூடுதல் வனப்பணியாளர்களை நியமிக்க கோரிக்கை

வருசநாடு: கம்பம் பள்ளத்தாக்கில் அரிசிக்கொம்பன் யானை அச்சுறுத்தி வரும் நிலையில் வருசநாடு, மேகமலை பகுதியில் காட்டு யானைகள் நடமாடுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்டவனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை, வருசநாடு வனப்பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலங்களில் விவசாயிகள் இலவமரம், கொட்டை முந்திரி, எலுமிச்சை, பீன்ஸ், அவரை ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், மானாவாரி நிலங்களில் மொச்சை, உளுந்து, தட்டப்பயிறு, கொள்ளு உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்துள்ளனர்.

தேவாரம், பண்ணைபுரம், போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதி விவசாய நிலங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்த சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கடமலைக்குண்டு ஒன்றியம், வருசநாடு, தேவாரம், பண்ணைபுரம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது காட்டு யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்கி விடுகிறது.

பருவநிலை மாற்றமும்; விலங்குகளின் தொல்லையும்
கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது. எனவே வனத்துறையினர் தலையிட்டு வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தாலுகாவில் பெரும்பாலான கிராமங்களில் விவசாய நிலங்களில் தொல்லை தரும் யானைகளை அடர்ந்த வனங்களில் கொண்டு சென்று விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வனத்துறையினரின் நடவடிக்கை அவசியம்
இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், இப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், பகல்நேரத்திலேயே சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. குறிப்பாக, ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். புலி, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளிடம் இருந்து தப்பித்து செல்வதே பெரும்பாடாக உள்ளது. மேலும் மாலை 6 மணிக்கு மேல் மலைக்கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, கடலை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட சிரமமாக உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், என்றனர்.

வனப்பணியாளர்கள் பற்றாக்குறை
மலைக்கிராம விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகிறார்கள். ஆனாலும், ெதாடர்ந்து யானைகள் நடமாட்டம் இப்பகுதியில் இருந்து வருகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரியிடம் கேட்டால், வனப்பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மேகமலை, வெள்ளிமலை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பணி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே கூடுதல் வனப்பணியாளர்களை நியமித்து யானை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்காணிக்க வேண்டும்’’ என்கின்றனர்.

அரிசிக்கொம்பன் வராமல் தடுங்க…
அரசரடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கம்பம் பகுதி மக்களை அரிசி கொம்பன் யானை கடந்த சில நாட்களாக பயமுறுத்தி வருகிறது. அந்த யானையை வனத்துறை அலுவலர்கள் வெள்ளிமலை, அரசரடி வனப்பகுதியில் விடுவதாக தெரிவித்துள்ளனர். இந்த யானை எங்கள் பகுதிக்கு வந்தால் விவசாய பயிர்களை சேதப்படுத்தி, பொதுமக்களை அச்சுறுத்தும். எனவே எங்கள் பகுதிக்கு அரிசி கொம்பன் யானையை கொண்டு வரக்கூடாது’ என்றனர்.

The post அரிசிக்கொம்பன் அச்சுறுத்தி வரும் நிலையில் வருசநாடு, மேகமலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: