ஆஸி ஓபன் டென்னிஸ் சளைக்காத சபலென்கா மின்னலாய் மின்னிய மிரா

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் ரஷ்ய இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா, உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா அபார வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டி ஒன்றில் ரஷ்ய இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரி உடன் மோதினார். போட்டியின் துவக்கம் முதல் துள்ளிக் குதித்து சுழன்றாடிய ஆண்ட்ரீவாவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சக்காரி திணறினார். அதனால், ஒரு புள்ளி கூட விட்டுத்தராமல் முதல் செட்டை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் ஆண்ட்ரீவா வசப்படுத்தினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், அடுத்த செட்டையும் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, சீனாவின் பாய் ஜுவோக்சுவான் மோதினர். துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய சபலென்கா, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் அட்டகாச வெற்றியை பதிவு செய்து 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

* 3 வது சுற்றுக்கு முன்னேற்றம்: அல்காரஸ் அட்டகாசம்
ஆஸ்திரேலியன் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மன் வீரர் யானிக் ஹான்ப்மான் மோதினர். முதல் செட்டில் இரு வீரர்களும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடினர். டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார். அதன் பின் சுதாரித்து அட்டகாசமாக ஆடிய அல்காரஸ் அடுத்த இரு செட்களையும், 6-3, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 3-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories: