* கமாலினி வெளியே வைஷ்ணவி உள்ளே
வதோதரா: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் தமிழகத்தை சேர்ந்த கமாலினி (17) காயம் காரணமாக விலகி உள்ளார். மும்பை அணிக்காக கடைசி 5 போட்டிகளில் 4ல் துவக்க வீராங்கனையாக களமிறங்கிய கமாலினி, 97.40 ஸ்டிரைக் ரேட்டுடன் 75 ரன்களை மட்டுமே எடுத்தார். அவருக்கு பதில் மும்பை அணியில் சுழல் பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். வைஷ்ணவிக்கு ரூ.30 லட்சம் தரப்படும் என மகளிர் பிரீமியர் லீக் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* ஓய்வு பெற்றார் சாய்னா நேஹ்வால்
புதுடெல்லி: கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை சாய்னா நேஹ்வால், பேட்மின்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர், கடந்த 2016ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஆடியபோது முழங்காலில் காயமடைந்தார். அதன் பின் சிறப்பாக ஆட முடியாமல் அவதிப்பட்டு வந்த சாய்னா, கடைசியாக 2023ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபனில் பங்கேற்றார். கடந்த 2 ஆண்டுகளாக ஆடாமல் ஒதுங்கி இருந்த அவர் தற்போது, ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
* ஃபிபா தரவரிசை செனகல் அசத்தல்
லண்டன்: சமீபத்தில் முடிந்த ஆப்கோன் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற செனகல் அணி, ஃபிபா கால்பந்து தரவரிசையில் 7 நிலைகள் உயர்ந்து 12ம் இடத்தை பிடித்துள்ளது. இறுதிப் போட்டியில் செனகலிடம் தோல்வியை தழுவியபோதும், மொரோக்கோ அணி, 3 நிலைகள் உயர்ந்து 8வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. ஆப்கோன் கால்பந்து போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற நைஜீரியா அணி, ஆப்ரிக்க அணிகளில் அதிகபட்சமாக 12 நிலைகள் உயர்ந்து 26வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், கேமரூன் அணியும் 12 நிலைகள் உயர்ந்து 45வது இடத்தை பிடித்துள்ளது. ஒட்டு மொத்த நாடுகளில் ஐரோப்பா சாம்பியன் ஸ்பெயின் அணி முதலிடம் பிடித்துள்து. அர்ஜென்டினா 2, பிரான்ஸ் 3வது இடங்களை பிடித்துள்ளன.
