ஆஸி ஓபன் டென்னிஸ்: நளினமாய் வென்ற எலினா

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபாகினா அட்டகாச வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் ரஷ்யாவில் பிறந்து கஜஸ்தான் நாட்டுக்காக ஆடி வரும் எலினா ரைபாகினா, ஸ்லோவேனியா வீராங்கனை கஜா ஜுவான் மோதினர். துவக்கம் முதல் அட்டகாசமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய எலினா முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார்.

தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டையும் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், உக்ரைன் வீராங்கனை ஒலெக்சாண்ட்ரா ஒலின்கோவா மோதினர். முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் விட்டுக் கொடுக்காமல் சளைக்காமல் மோதியதால், டைபிரேக்கர் வரை நீண்டது. கடைசியில் அந்த செட்டை 7-6 (8-6) என்ற புள்ளிக் கணக்கில் மேடிசன் கைப்பற்றினார். 2வது செட்டில் சுதாரித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மேடிசன் 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

* 2ம் சுற்றில் சின்னர்
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், பிரான்ஸ் வீரர் ஹியுகோ கேஸ்டன் மோதினர். துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர், முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அவரது ஆதிக்கமே காணப்பட்டது. அந்த செட்டை, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் அவர் கைப்பற்றினார். 3வது செட் துவங்கியபோது, காயம் காரணாக கேஸ்டன் வெளியேறினார். அதையடுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சின்னர், 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ், பிரான்சின் வாலன்டின் ரோயர் மோதினர். இருவரும் சிறப்பாக ஆடிய அந்த செட்டை கடும் போராட்டத்துக்கு பின்னர், 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் டெய்லர் வசப்படுத்தினார். அடுத்த செட், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் ரோயர் வசம் சென்றது. அதன் பின் சுதாரித்து ஆடிய டெய்லர், அடுத்த இரு செட்களையும்., 6-1, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். அதனால், 3-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related Stories: