*படகுதுறையில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பு
கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.இந்த நிலையில் நேற்று வார விடுமுறையின் கடைசி நாளையொட்டி கன்னியாகுமரியில் காலையில் இருந்தே அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் கணிசமான அளவில் இருந்தது.
அதிகாலையில் திரிவேணி சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டு கடலில் இருந்து வெளிவரும் கதிரவனை காண ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் லேசான மேகமூட்டம் காரணமாக சிறிது நேரத்துக்கு பின்னர் கடலில் இருந்து உதித்த சூரியனை கண்டு சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
பின்னர் ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு அங்குள்ள பிரசித்தி பெற்ற கணபதி கோயில் மற்றும் பகவதி அம்மன் கோயில்களுக்கு சென்றனர்.
அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் காந்தி, காமராஜர் மண்டபங்கள், காட்சி கோபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.
அதைத்தொடர்ந்து காலை 8 மணி ஆனதும் சுற்றுலா பயணிகளின் கவனம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நோக்கி திரும்பியது. கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலத்தை கண்டுகளிக்க படகில் செல்ல டிக்கெட் எடுக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பின்னர் டிக்கெட் எடுத்து படகில் விவேகானந்தர் மண்டபம், கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலை பகுதிகளுக்கு சென்று சுற்றிபார்த்தனர்.நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கன்னியாகுமரியில் உள்ள பெரும்பாலான கடைகளில் விற்பனை சூடுபிடித்தது.
இதற்கிடையே அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
