நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்

நெல்லை : நெல்லை, வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதமடைந்தன. இதனால் எழுந்த புகாரை அடுத்து அவசரகதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட போதும் வெறும் பெயரளவுக்கு வேலை மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெல்லையில் நாளுக்கு நாள் அதிகரித்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும்பொருட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதிய சாலை, பாலங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டன.

அந்தவகையில் நெல்லையின் இதயப்பகுதியாகத் திகழும் வண்ணார்பேட்டையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் பொருட்டு அரசு சார்பில் ரூ.கோடிக்கணக்கில் வடக்கு, தெற்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டன. அத்துடன் முன்னாள் சபாநாயகர் செல்லபாண்டியன் பெயரில் மேம்பாலமும் கட்டித் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து சிமென்ட் சாலையின் மீது அமைக்கப்பட்ட தார்ச் சாலையானது அவ்வப்போது பெயர்ந்து வருவது அதில் பயணிக்கும் வாகனஓட்டிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. இதுகுறித்த புகார்களின் பேரில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர்தான் இந்த மேம்பாலத்தில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடந்தது. ஆனால், அந்த சாலை ஒரு முழுமையான கட்டமைப்புடன் இல்லாமல், பழைய சாலையின் மீது தாரை ஒரு மெல்லிய ‘பேஸ்ட்’ போல ஒட்டிச் சென்றது தற்போது அம்பலமாகி உள்ளது.

அதாவது செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும் வேகத்தில், தார்ச் சாலை ஆங்காங்கே பிதுங்கி மேடு பள்ளங்களாக மாறியுள்ளன. இதனால் புதிதாக போடப்பட்ட சாலை இரண்டு மாதங்கள் கூடத் தாக்குப் பிடிக்கவில்லை வாகனஓட்டிகள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை மீண்டும் புனரமைக்க உத்தரவிட்டனர். அதன்பேரில் சீரமைப்பு பணி நேற்று நடந்தது. இதில் ஈடுபட்ட பணியாளர்கள் தார்ச் சாலையைத் தோண்டி எடுக்காமல், ஒரு தகடு போல எளிதாக பெயர்த்து எடுக்கும் அளவிற்கு சாலையானது சேதமடைந்து காணப்பட்டது.

இதை வாகனஓட்டிகள் அதிர்ச்சியுடன் பார்த்துச் சென்ற நிலையில் சீரமைப்பு அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு வெறும் பெயரளவுக்கு அவசர கதியில் கண்துடைப்புப் பணிகளை மேற்கொள்ளும் போக்கை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் கைவிட்டு இனியாவது தரமான மூலப்பொருட்களைக் கொண்டு மேம்பாலச் சாலையைச் சீரமைக்க முன்வரவேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் போக்குவரத்தை நெறிப்படுத்த வேண்டிய இடங்களில் இதுபோன்று காணப்படும் தரமற்ற சாலைகளால் அவ்வப்போது விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தள்ளனர்.

Related Stories: