புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி

*லேசான காயத்துடன் நண்பர் உயிர் தப்பினார்

புளியங்குடி : புளியங்குடி அருகேயுள்ள முள்ளிக்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சுபாஷ். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் தருண்குமார் (18). இவர் புளியங்குடி பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் தனது நண்பரான தலைவன்கோட்டையை சேர்ந்த ஆறுமுகபாண்டி மகன் சூர்யா (18) என்பவருடன் பைக்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக புளியங்குடி- சங்கரன்கோவில் சாலையில் உள்ள பல்க்கிற்கு சென்றார்.

பின்னர் பெட்ரோல் நிரப்பிவிட்டு திரும்பி பாம்புகோவில் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். சூர்யா, பைக்கை ஓட்டினார். தருண்குமார், பின்னால் அமர்ந்திருந்தார். இரவு நேரத்தில் சாலை இருள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் முன்னால் இரும்பு கலப்பையுடன் கூடிய டிராக்டர் சாலையில் சென்று கொண்டிருந்தது. இதனை பைக்கை ஓட்டி சென்ற சூர்யா, சரியாக கவனிக்கவில்லை.

திடீரென டிராக்டர் முன்னால் செல்வதை கண்ட அவர் அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்துள்ளார். இதில் பைக் பின்னால் அமர்ந்து பயணம் செய்த தருண்குமார், டிராக்டர் இரும்பு கலப்பை மீது தூக்கி வீசப்பட்டதில் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

புளியங்குடி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர்அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சூர்யா, அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

Related Stories: