கல்லிடைகுறிச்சி-சிங்கம்பட்டி பிரதான சாலையில் தினமும் 16 முறை ரயில்வே கேட் அடைப்பால் மக்கள் அவதி

*பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதில் சிக்கல்

*சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

விகேபுரம் : கல்லிடைக்குறிச்சி-சிங்கம்பட்டி பிரதான சாலையில் தினமும் 16 முறை ரயில்வே கேட் அடைப்பால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். அதுவும் காலை நேரத்தில் 45 நிமிடம் அடைக்கப்படுவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரி செல்வதில் மாணவர்கள் சிககல் ஏற்பட்டுள்ளது.

அவசர மருத்துவ தேவைக்கு செல்வோர் சிக்கி கொள்வதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் ரயில்வே சுரங்கபாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

கல்லிடைக்குறிச்சியில் இருந்து சிங்கம்பட்டி செல்லும் பிரதான சாலையில் ரயில்வே கிராசிங் உள்ளது. இதை கடந்து தான் மணிமுத்தாறு, ஏர்மாள்புரம், வைரவிகுளம், கோல்டன் நகர், செம்பருத்தி மேடு, தெற்கு பாப்பான்குளம், மயிலாடும்பாறை, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, உச்சிமேடு, சமத்துவபுரம் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்ல வேண்டியுள்ளது.

இங்கு சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த 15 கிராமங்களில் இருந்து காலை நேரங்களில் அத்தியாவசிய தேவைகள், பணி நிமித்தமாக அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ரயில்வே கிராசிங்கை கடந்து தான் அம்பை, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இப்பகுதியில் ரயில் வரும் நேரங்களில் திடீரென கேட் அடைக்கப்படுவதால் அனைவரும் சிக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில்வே கேட் அதிக நேரம் அடைக்கப்படுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கேட் அடைக்கப்படுவதால் சரியான நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.

மேலும் பள்ளி, கல்லூரி செல்வோர் சில நேரங்களில் அனுமதிக்காமல் மீண்டும் ஊருக்கு திரும்பி வரும் நிலை தான் உள்ளது. அதே போன்று அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்பவர்கள் சில நேரங்களில் ரயில்வே கேட்டில் மாட்டிக்கொள்கின்றனர்.

இதனால் சில நேரங்களில் உயிரிழப்பு போன்ற அசம்பாவித சம்பவங்களும் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து இப்பகுதியில் சுரங்கபாதை அமைக்க பொதுமக்கள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அம்பை ஒன்றிய இளைஞரணி நேதாஜி தேசிய பார்வர்ட் பிளாக் பொறுப்பாளர் கசமுத்து மந்திரி கூறுகையில், அம்பை தாலுகா கல்லிடைக்குறிச்சி ரயில்வே சரகத்திற்குட்பட்ட பாப்பான்குளம், சிங்கம்பட்டி ரயில்வே கேட் அடைப்பதால் எண்ணற்ற மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காலை 7.30 மணியளவில் அடைக்கப்படும் ரயில்வே கேட் 8.15 மணி அளவில் தான் திறக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் அவதியடைந்து வருகின்றனர்.தினமும் 16 முறை கேட் அடைக்கப்படுகிறது. எனவே ரயில்வே நிர்வாகம் இதை மனதில் வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு சப்வே அமைக்க வேண்டும்’ என்றார்.

ஆய்வு செய்வதில் அதிகாரிகள் அலட்சியம்

பொதுவாக ரயில்வே கிராசிங்கை தினமும் எத்தனை வாகனங்கள் கடந்து செல்கிறது என்று ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதாவது ஆண்டுக்கு ஒரு முறை கல்லிடைக்குறிச்சி-மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி-சிங்கம்பட்டி, அம்பை-பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே கிராசிங்கில் வாகனங்கள் எண்ணிக்கையை ஆய்வு செய்ய வேண்டும்.

அப்பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் பட்சத்தில் ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கபாதை அமைக்க பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக இது போன்று ஆய்வு பணிகள் ரயில்வே நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் ரயில்வே கிராசிங்குகளில் சிக்கி பல்வேறு தரப்பினரும் தவித்து வருகின்றனர்.

அம்பை-பாபநாசம் கேட்டில் தொடரும் நெரிசல்

நெல்லையில் இருந்து வரும் வாகனங்கள் அம்பை-பாபநாசம் பிரதான சாலையில் உள்ள ரயில்வே கேட்டை கடந்து தான் பாபநாச சுவாமி கோயில், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், அகஸ்தியர் அருவிக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். அம்பை-பாபநாசம் பிரதான சாலையில் தினமும் 16 முறை ரயில்வே கேட் மூடப்படுவதால் அப்பகுதியில் வாகனங்களும் இரண்டு புறங்களும் பல கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கின்றன.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் பிரதான சாலையில் உள்ள இந்த ரயில்வே கேட்டில் இதுவரை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதியில் பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தாத பட்சத்தில் வருங்காலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் இப்பகுதி மக்கள் சிக்கி தவிக்கும் சூழல் உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: