அருமனை அருகே தமிழக- கேரள எல்லையில் மலையில் பொக்லைன் சரிந்து தொழிலாளி பலி

*3 முறை குட்டிக்கரணம் அடித்து விழுந்தது

அருமனை : அருமனை அருகே மலையில் பொக்லைன் சரிந்து தொழிலாளி பலியானார்.குமரி மாவட்டம் அருமனை அருகே கேரள எல்லை வெள்ளறடை அருகே குருசுமலை அடுத்த குறிச்சி மலையில் காக்கைதூக்கி என்ற இடம் உள்ளது.

இந்த மலைப்பகுதியில் அதிகளவில் ரப்பர் மரங்கள் உள்ளன. இந்த நிலையில் காக்கைதூக்கி மலையில் உள்ள தனியார் ரப்பர் எஸ்டேட்டில் மரக்கிளைகளை முறித்து கீழே வைக்கும் பணிக்கு கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மார்டாலி பகுதியை சேர்ந்த ராயப்பன் (39) என்பவர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்துள்ளார். இவர் தற்போது கேரள மாநிலம் ஆனாவூர் என்ற இடத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் குறிச்சி மலைக்கு வந்த ராயப்பன் மலையில் ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்ட பொக்லைன் இயந்திரத்தில் மலையில் ஏறி சென்று கொண்டிருந்தார். பாதி வழியில் அவர் சென்ற போது எதிர்பாராதவிதமாக பொக்லைன் இயந்திரம் சரிந்து 3 முறை குட்டிக்கரணம் அடித்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் இயந்திரத்தின் மேலே இருந்த ராயப்பன் கீழே விழுந்து இயந்திரத்தின் அடியில் சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மற்ற பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் கேரள மாநிலம் வெள்ளறடை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் வெள்ளறடை போலீசார் வந்து பலியான ராயப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: