காசிப்பூர்: இந்திய கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக நடிகை குஷி முகர்ஜி கூறிய புகாரால், அவர் மீது ரூ.100 கோடி மதிப்பிலான அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமான நடிகை குஷி முகர்ஜி என்பவர் சமீபத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், ‘நான் கிரிக்கெட் வீரர்களை காதலிக்க விரும்பவில்லை; ஆனால் பல வீரர்கள் என்னை பின்தொடர்கின்றனர்’ என்று தெரிவித்திருந்தார். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ், தனக்கு கடந்த காலங்களில் அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பியதாக அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
திருமணமான ஒரு வீரரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடிகை வெளியிட்ட இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவியது. ஆதாரமற்ற இத்தகைய புகார்களைக் கூறி விளம்பரம் தேடுவதாகக் கூறி ரசிகர்கள் பலரும் நடிகைக்கு தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சூரியகுமார் யாதவின் சொந்த ஊரான உத்திரப்பிரதேச மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்த ஃபைசான் அன்சாரி என்பவர் நடிகை குஷி முகர்ஜி மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை தொடங்கியுள்ளார். தவறான தகவலை பரப்பியதற்காக நடிகை மீது ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காசிப்பூர் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இராஜ் ராஜாவிடம் அளிக்கப்பட்டுள்ள புகாரில், ‘பொய் குற்றச்சாட்டுகளை கூறி சூரியகுமார் யாதவின் புகழை சீர்குலைத்த நடிகையை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே சூரியகுமார் யாதவ் தனது மனைவி தேவிஷா ஷெட்டியுடன் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த வழக்கு விவகாரம் குறித்து இன்று வரை இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
