வதோதரா: வதோதராவில் இன்று துவங்கும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ரோகித்-கோஹ்லி மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதலில் ஒருநாள் போட்டி தொடர் நடக்கும் நிலையில், இதன் முதல் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடக்கிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோஹ்லி சூப்பர் பார்மில் உள்ளனர். துணைகேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் காயம் அடைந்ததால், தென்ஆப்ரிக்க தொடரை தவறவிட்டார். தற்போது காயத்தில் இருந்து மீண்டு களம் காண்கிறார். அவருடன் மிடில் ஆர்டரில் கே.எல்.ராகுல் வலு சேர்க்கிறார். பலம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றிருப்பதால், ஆடும் லெவனில் யார், யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பவுலிங்கில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா ஆகியோர் வேகத்தில் மிரட்டுவர். சுழலில் குல்தீப் யாதவ்வுக்கு இடம் கிடைக்கும். ஆல்ரவுண்டர் ஜடேஜா இடத்தை தக்க வைத்துக்கொள்வார். தமிழகவீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மறுபுறம் ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணியில் இளம்வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
டோவன் கான்வே, பிலிப்ஸ், டேரில் மிட்செல், வில்யங், ஹென்றி நிக்கோலஸ் பேட்டிங்கில் வலு சேர்ப்பர். பவுலிங்கில் கைல் ஜேமிசன், மைக்கேல் ரே ஆகியோருடன் புதுமுக வீரர்கள் ஜெய்டன் லெனாக்ஸ், கிறிஸ் கிளார்க் மிரட்ட காத்திருக்கின்றனர். சுழலில் தமிழகத்தின் வேலூரை பூர்வீகமாக கொண்ட ஆதித்யா அசோக் களம் இறங்க வாய்ப்புள்ளது.
இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குகின்றன. இந்திய நட்சத்திர கூட்டணியான ரோ-கோ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் கோஹ்லியும், ரோகித்தும் கலக்கினர். அதிக ரன் குவித்து கோஹ்லி தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார். இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
* இதுவரை நேருக்கு நேர்…
ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் 120 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 62ல் இந்தியா, 50ல் நியூசிலாந்து வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 7 போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 7 போட்டிகளில் இந்தியா தான் வென்றுள்ளது. வதோதரா கோடம்பி ஸ்டேடியத்தில் முதன்முறையாக ஆண்கள் சர்வதேச போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
