பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் நேற்று, உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார். துவக்கம் முதல் அட்டகாசமாக ஆடிய சபலென்கா முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அவரது ஆதிக்கமே காணப்பட்டது. கடைசியில் அந்த செட்டையும் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் சபலென்கா கைப்பற்றினார்.
அதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா – ரஷ்யாவின் லியுட்மிலா டிமிட்ரீவ்னா சாம்சனோவா மோதினர். முதல் செட்டில் சிறப்பாக ஆடிய பெகுலா 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இருப்பினும் 2வது செட்டில் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக மோதியதால் டைபிரேக்கர் வரை நீண்டது. கடைசியில் அந்த செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் பெகுலா வசப்படுத்தினார். அதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் அரை இறுதிக்குள் நுழைந்தார்.
