இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கும் தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக், நடிகர் ரஜினிகாந்தின் ‘படையப்பா’ படத்தில் வரும் பிரபல பஞ்ச் டயலாக்கான ‘என் வழி தனி வழி’ என்கிற வசனத்தை தனது கையில் டாட்டூ போட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோக்களும், செய்திகளும் கடந்த காலங்களில் இணையத்தில் வைரலாகின.
ஆதித்யாவிற்கு நான்கு வயதாக இருந்தபோது அவரது குடும்பம் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்தது. இந்த நிலையில், சென்னையில் உள்ள சிஎஸ்கே அகாடமியில் இரண்டு வார சுழல் பயிற்சி முகாமில் தனது திறமைகளை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மத்தியில் இந்தியா வந்தபோது, அவர் இணையத்தில் வைரலாக ஆரம்பித்தார்.
படையப்பா படத்தின் வசனத்தை பச்சைக் குத்திக் கொண்டது தொடர்பாக அவர், “என் தாத்தா உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் ’படையப்பா’ படம் குறித்து நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அவர் இறந்த பின்பு, அவருக்கும் எனக்கும் நெருக்கமான உரையாடலை நினைவூட்ட, ’என் வழி தனி வழி’ என டாட்டூ போட்டுக் கொண்டேன் எனக் கூறியுள்ளார்.
