கோலாலம்பூர்: மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று, இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை அகேனே யமகுச்சி மோதினர். போட்டியின் துவக்கம் முதல் அட்டகாசமாக ஆடிய சிந்து, முதல் செட்டை 21-11 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அந்த செட்டின் கடைசி கட்டத்தில் யமகுச்சி காயமடைந்ததால் போட்டியில் இருந்து விலகியதால் சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் தென் கொரியாவின் ஆன் சே யங் – டென்மார்க் வீராங்கனை லைன் ஹோஜ்மார்க் ஜேர்பெல்ட் மோதினர். துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய ஆன் சே யங், முதல் செட்டை 21-8 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அவரது ஆதிக்கமே காணப்பட்டது. கடைசியில் அந்த செட்டையும், 21-9 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
