2வது முறையாக கடிதம்; போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வற்புறுத்தும் வங்கதேசம்: அவசர ஆலோசனையில் ஐசிசி

 

டாக்கா: 2026ம் அண்டிற்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகிறது. இந்த நிலையில், இந்தியா வந்து விளையாடுவது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம், ஜெய் ஷா தலைவராக பதவி வகிக்கும் ஐசிசிக்கு 2வது முறையாகக் கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி, வங்கதேசம் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பிப்ரவரி 7ம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில், வங்கதேச அணி தனது லீக் ஆட்டங்களை இந்தியாவின் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியா வர வங்கதேசம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் “பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று எதைச் குறிப்பிடுகிறீர்கள்?” என்று ஐசிசி கேட்டிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, தங்களுக்கு குறிப்பிட்ட சில அச்சங்கள் இருப்பதாக வங்கதேசம் இந்தக் கடிதத்தில் விளக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், கடிதத்தின் உள்விவரங்கள் என்ன என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்குள்ளேயே இருவேறு கருத்துகள் நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கதேச விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தரப்பானது, “போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றினால் மட்டுமே உலக கோப்பையில் விளையாடுவோம்” என்று மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

ஆனால், பிசிசிஐயை சமரசம் செய்யும் முனைப்பில் மற்றொரு தரப்பு ஈடுபட்டு வருவதும், அது ஐசிசி-யுடன் பேசி கூடுதல் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டு தொடரில் பங்கேற்க முயன்று வருகிறது. மேலும் போட்டிகளைப் புறக்கணித்தால், அது நீண்ட கால அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் இந்த தரப்பு சமரசம் பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பரியமாக பிசிசிஐ-யுடன் இணக்கமாகவே செயல்பட்டு வந்த வங்கதேச வாரியமானது, தற்போது அரசியல் மாற்றங்கள் காரணமாக சற்று கடுமையான போக்கை கடைப்பிடித்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக வங்கதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் ஐபிஎல் தொடரிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு பிசிசிஐ வற்புறுத்தியது போன்ற சம்பவங்களே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

உலக கோப்பையில் வங்கதேச அணி விளையாடும் போட்டிகளை கொல்கத்தாவிலிருந்து கொழும்புக்கு மாற்ற தற்போது வரை ஐசிசி எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் எடுக்கவில்லை. இருப்பினும், வங்கதேசத்தின் 2வது முறையாக கடிதம் அனுப்பியுள்ளதால், இதுகுறித்து ஐசிசி அவசர ஆலோசனை கூட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: