ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் புலியாய் பாய்ந்த எலினா காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆக்லாந்து: ஏஎஸ்பி கிளாசிக் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்று, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, பிரிட்டன் வீராங்கனை கேட்டி சார்லோட் போல்டர் மோதினர்.

முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக மோதியபோதும் கடைசியில் அந்த செட்டை, 7-5 என்ற புள்ளிக் கணக்கில் எலினா வசப்படுத்தினார். அடுத்து நடந்த செட்டிலும் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய அவர் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றார். அதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா மேனிகோ ஈலா, குரோஷியா வீராங்கனை பெட்ரா மார்சின்கோ மோதினர். இப்போட்டியில் அட்டகாசமாக ஆடிய ஈலாவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பெட்ரா திணறினார். அதனால், 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ஈலா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Related Stories: