‘ஈடி’ மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக குற்றச்சாட்டு; டெல்லியில் அமித் ஷா ஆபீஸ் முன் திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்: கொல்கத்தாவில் பிரம்மாண்ட கண்டன பேரணி

 

கொல்கத்தா: அமலாக்கத்துறை மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக கூறி டெல்லியில் இருக்கும் அமித் ஷா ஆபீஸ் முன் திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இன்று ஒன்றிய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரம்மாண்ட கண்டன பேரணி நடைபெற்றது. மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான ‘ஐ-பேக்’ அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது ஐ-பேக் நிறுவனர் பிரதிக் ஜெயின் வீட்டிற்கு நேரடியாகச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கிருந்து கட்சியின் வேட்பாளர் பட்டியல் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பச்சைக் கோப்பை எடுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நிலக்கரி கடத்தல் ஊழல் என்ற போர்வையில், கணினித் தரவுகள் மற்றும் தேர்தல் வியூகங்களைத் திருடவே ஒன்றிய அரசு இந்தச் சோதனையை நடத்துவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கொல்கத்தாவில் ஜாதவ்பூர் முதல் ஹஸ்ரா வரை முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கண்டன பேரணி நடைபெற்றது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘தேர்தல் வெற்றி வாய்ப்பைத் தடுப்பதற்காக 15 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன; இது அரசியல் ரீதியான கொள்ளை’ என்று ஆவேசமாகக் கூறினார்.

மேலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறி கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து டெல்லியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகம் முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) இன்று காலை திடீரெனத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு, ‘எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதை உடனே நிறுத்த வேண்டும்’ என்று முழக்கங்களை எழுப்பினர். அமைச்சர் அலுவலகத்தின் வாசலிலேயே எம்பிக்கள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர்களை பாதுகாப்புப் படையினர் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: