தங்கம் திருட்டு வழக்கில் திருப்பம் சபரிமலை தந்திரி கண்டரர் ராஜீவரர் அதிரடி கைது

திருவனந்தபுரம்: இந்தியாவில் திருப்பதிக்கு அடுத்தபடியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் தான் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். வருமானத்திலும் திருப்பதிக்கு அடுத்த இடத்தில் சபரிமலை கோயில் உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும் சபரிமலை கோயிலில் இருந்து சமீபத்தில் தங்கம் திருடப்பட்டதாக வெளியான தகவல் பக்தர்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியது. கோயில் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர்களே இந்த திருட்டில் ஈடுபட்டது ஐயப்ப பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதனால்தான் இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் நேரடியாக கையில் எடுத்தது. உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்தன.

சபரிமலை கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளை செம்புத் தகடுகள் என்று போலி ஆவணம் தயாரித்து அவற்றை சென்னைக்கு கொண்டு சென்று விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ஸ்பான்சர் என்ற போர்வையில் தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர், முன்னாள் உயரதிகாரிகள், சென்னை அம்பத்தூர் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி, கர்நாடக மாநில நகை வியாபாரி கோவர்தன் என 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உண்ணி கிருஷ்ணன் போத்தியுடன் முன்னாள் தேவசம் போர்டு அமைச்சரும், தற்போதைய சிபிஎம் எம்எல்ஏவுமான கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் சபரிமலை தந்திரி கண்டரர் ராஜீவரர் ஆகியோருக்கு தொடர்பு இருந்ததாக தகவல் வெளியானதால் அவர்களும் இந்த வழக்கில் சிக்குவார்களா என்ற பரபரப்பு நிலவிவந்தது. இந்நிலையில் தந்திரி கண்டரர் ராஜீவரரை நேற்று சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடியாக கைது செய்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்பே விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி தந்திரிக்கு போலீசார் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

ஆனால் தனக்கு உடல்நலக் குறைவு இருப்பதாக கூறி அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று காலை செங்கணூரில் உள்ள தந்திரியின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து திருவனந்தபுரத்திற்கு அழைத்து வந்தனர். திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து எஸ்பி சசிதரன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் அவரிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். அதன் பிறகு போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதன்பின் போலீசார் அவரை கொல்லம் விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் தந்திரியுடன் சேர்த்து இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

* தந்திரிக்கு எதிராக முக்கிய ஆவணங்கள்
இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே தந்திரி கண்டரர் ராஜீவரர் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. தனக்கு எதுவும் தெரியாது, தங்கத்தை திருடியதில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முதலில் இவர் கூறிவந்தார். ஆனால் தங்கத் தகடுகளை வெளியே கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் தந்திரியும் கையெழுத்து போட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர உண்ணிகிருஷ்ணன் போத்திக்கும், தந்திரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இது மட்டுமில்லாமல் தந்திரிக்கு எதிராக மேலும் பல முக்கிய ஆவணங்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கிடைத்தது. இதனால்தான் தந்திரியை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

* ‘எந்த தவறும் செய்யவில்லை’
கைது நடவடிக்கைக்குப் பின்னர் தந்திரியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னை சிலர் சிக்க வைத்து விட்டனர் என்று கூறினார்.

* சர்ச்சையில் சிக்கும் 2வது தந்திரி
கடந்த 2006ம் ஆண்டு சபரிமலை தந்திரியாக கண்டரர் மோகனர் இருந்தார். அப்போது கொச்சியை சேர்ந்த ஷோபா ஜான் என்ற பெண், பூஜைக்காக தன்னை அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக நிற்க வைத்து போட்டோ எடுத்து மிரட்டி நகை, பணத்தை பறித்ததாக இவர் போலீசில் புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பூஜைக்காக அவர் செல்லவில்லை என்பது பின்னர் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் சபரிமலை தந்திரி பொறுப்பில் இருந்து கண்டரர் மோகனர் நீக்கப்பட்டார். இதுவரை அவருக்கு தந்திரி பொறுப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது கண்டரர் ராஜீவரரும் சர்ச்சையில் சிக்கியுள்ளதால் இனி வரும் நாட்களில் இவரது மகன் பிரம்மதத்தனும், மகேஷ் மோகனரரும் தான் கோயில் தந்திரி பொறுப்பை நிர்வகிப்பார்கள்.

* தந்திரி கடவுளுக்கு இணையானவரா?
சபரிமலை பக்தர்கள் மேல்சாந்தி மற்றும் தந்திரி பொறுப்பில் உள்ளவர்களை தெய்வத்திற்கு சமமாக கருதுகின்றனர். சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் பல பக்தர்கள் இவர்களை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்று காணிக்கையாக பணமும் கொடுத்து செல்கின்றனர். தந்திரி மற்றும் மேல்சாந்தியிடம் ஆசி பெறுவதை மிகவும் புண்ணியமாக பக்தர்கள் எண்ணுகின்றனர். ஆனால் எல்லா பக்தர்களும் அவ்வளவு எளிதில் தந்திரியை சந்தித்து விட முடியாது.
சபரிமலை கோயிலில் அனைத்து முக்கிய முடிவுகளையும் தந்திரி குடும்பத்தினர் தான் எடுப்பார்கள்.

சபரிமலையில் எதை செய்வது என்றாலும் தந்திரியின் அனுமதி கட்டாயமாகும். இங்கிருந்து தங்கத்தை வெளியே கொண்டு செல்வதற்கு தந்திரி தான் அனுமதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த சில மாதங்களுக்கு முன் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் பத்மகுமார் கைது செய்யப்பட்டார். அப்போது, கடவுளுக்கு இணையாக கருதப்படுபவர்களே இதன் பின்னணியில் இருக்கும் போது நான் என்ன செய்ய முடியும் என்று நிருபர்களிடம் அவர் கூறினார். இப்போது தந்திரி கண்டரர் ராஜீவரர் கைது செய்யப்பட்டதின் மூலம் அவரைத்தான் பத்மகுமார் குறிப்பிட்டார் என்று தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.

* அமலாக்கத்துறையும் களத்தில் குதித்தது
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறையும் தயாராகிவிட்டது. இந்த விவகாரத்தில் கருப்புப் பணம் புழக்கத்தில் விடப்பட்டிருக்கலாம் என்று ஏற்கனவே அமலாக்கத்துறை சந்தேகித்தது. கேரள போலீஸ் ஒத்துழைக்காததால், உயர்நீதிமன்றத்தை அமலாக்கத்துறை அணுகியது. தொடர்ந்து விசாரணை ஆவணங்களை அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தங்கம் திருட்டு தொடர்பாக இப்போது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கொச்சி உதவி இயக்குனர் ராகேஷ் குமார் தலைமையில் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Related Stories: