புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இன்னும் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் அளித்த பேட்டியில், “இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்து, கோப்புகள் தயாராக இருந்தன. அதிபர் டிரம்ப்தான் இந்த ஒப்பந்தங்களை இறுதி செய்வார். அதற்காக பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பை அழைத்து பேச வேண்டும் என நாங்கள் கூறினோம். ஆனால் அதற்கு இந்தியா தயக்கம் காட்டியது. இறுதிக்கட்டத்தில் பிரதமர் மோடி அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசியில் பேச மறுத்ததே இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் முடங்கியதற்கு காரணம்” என குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் அமெரிக்காவின் கருத்தை இந்தியா மறுத்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய வௌியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த முடக்கம் தொடர்பாக அமெரிக்க வௌியுறவு செயலாளர் லுட்னிக்கின் கருத்தை பார்த்தேன். இந்தியா கடந்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி முதலே அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பிறகு இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்துக்கு இந்தியா ஆர்வமாக உள்ளது. இதுதொடர்பாக கடந்த 2025ம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் 8 முறை தொலைபேசியில் பேசி உள்ளார். எனவே, அமெரிக்காவின் குற்றச்சாட்டில் துல்லியம் இல்லை” என்று இவ்வாறு கூறினார்.
