ஓடும் ரயிலின் மேற்கூரையில் ஏறிய வாலிபர்: நள்ளிரவில் 20 நிமிடம் ரயில் நிறுத்தம்

 

ஜாலோர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஓடும் ரயிலின் மேற்கூரையில் வாலிபர் ஒருவர் ஏறியதால் 25,000 வோல்ட் மின்சாரம் தாக்கும் அபாயத்தில் ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் முதல் சபர்மதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று நள்ளிரவு ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டம் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் பயணித்த வாலிபர் ஒருவர் திடீரென ஓடும் ரயிலின் மேற்கூரையில் ஏறிச் செல்லும் விபரீத முயற்சியில் ஈடுபட்டார். தலைக்கு மேலே 25,000 வோல்ட் உயர் அழுத்த மின் கம்பிகள் சென்று கொண்டிருந்த நிலையில், எந்த அச்சமும் இன்றி அவர் கூரையின் மீது நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கக்கூடும் என்பதால், நிலைமையை உணர்ந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக ரயிலை நடுவழியில் நிறுத்தினர். நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் ரயிலில் இருந்த பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாலிபரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கவும், விபத்தைத் தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சுமார் 20 நிமிடங்கள் வரை ரயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘பாதுகாப்பு காரணங்களுக்காகவே ரயில் நிறுத்தப்பட்டது’ என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் நள்ளிரவில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

Related Stories: