*துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சூலூர் : கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயிலுக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான தங்கத்தேர் செய்யும் பணிகள் நடந்து வருகின்றது.
அறங்காவலர் குழு, ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் நடைபெறும் இந்த திருப்பணியில் மரத்தேர் பணிகள் முடிக்கப்பட்டு செப்பு தகடுகள் பதிக்கும் பணியும் முடிவடைந்துள்ளது. தற்போது, தங்கத்தகடுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தங்கத்தேருக்காக சுமார் 9 கிலோ தங்கம் பொதுமக்கள் இடமிருந்து திருப்பணிக் குழுவினர் அன்பளிப்பாக பெற்றுள்ளனர். இது தற்போது வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தங்க தகடுகள் பொருத்தும் பணி துவங்கியுள்ள நிலையில் தினமும் தேவைக்கேற்ப தங்க கட்டிகளை எடுத்து வந்து உருக்கி தகடுகள் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தங்கக்கட்டிகள் வங்கியில் இருந்து எடுத்து வரும் போது மற்றும் தகடுகள் செய்து பொருத்தும் போது தேர் செய்யும் இடத்திலும் பாதுகாப்பான சூழல் வேண்டும் என திருப்பணி குழுவினர் வேண்டுகோளை ஏற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து 24 மணி நேரம் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்புடனும் வீடியோ கேமரா பதிவுகள் உடனும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேருக்கான தங்கத்தகடு பணிகளை கலைநயத்துடன் செய்து வருகின்றனர்.
செஞ்சேரிமலை திருநாவுக்கரசு மாரிமுத்து அடிகளார் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது. 75% முடிவடைந்து நிலையில் ஓரிரு மாதங்களில் தகடுகள் பொருத்தியவுடன் தங்கதேர் திருவீதி உலா நடைபெறும்.
