* கழகத்தை உடைக்க போறதா வீராப்பு, எடப்பாடி அடம் பிடிப்பதால் விரக்தி
சேலம்: எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானவுடன் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டார். இதனால் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர் மீட்பு கழகம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். டி.டி.வி தினகரனோ, அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால் சசிகலாவோ அதிமுகவை ஒருங்கிணைப்பேன், நான் தான் அதிமுக பொதுச்செயலாளர் என அவரது ஆதரவாளர்களிடம் கூறிவருகிறார்.
இவர்கள் 3 பேரும் எப்படியாவது அதிமுகவில் சேர்ந்து விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பாஜவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்த்து விடுவதாக பாஜ உறுதி கூறியது. இதனை நம்பிய ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி, தேனியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினர்.
இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை சேர்ப்பதற்கு நீங்கள் முயற்சி மேற்கொண்டால் கூட்டணியில் இருந்து வெளியே வந்து விடுவேன் என எடப்பாடி பழனிசாமி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து இனிமேல் கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என கூறி ஒதுங்கிக்கொண்டது பாஜ. என்றாலும் தங்களது கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என பாஜவும், எடப்பாடி பழனிசாமியும் நம்பினர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக கூட நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஓ.பன்னீர்செல்வமும் தினகரனும் உறுதியாக கூறியதுடன் அவரை தோற்கடிக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என அறிவித்தனர். இந்நிலையில் லண்டன் வழக்கு, இலைக்கட்சி சின்னத்திற்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் தினகரன், பாஜ மிரட்டலுக்கு பயந்து தற்போது வாய் திறக்காமல் இருந்து வருகிறார்.
இவரை அதிமுக கூட்டணியில் சேர்த்து கொள்ள எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்த நிலையில், டெல்லியில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்கவே மாட்டோம் என உறுதியாக கூறிவிட்டார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் எங்கு போவது என்பது தெரியாமல் பாலைவனத்தில் நிற்பதுபோன்ற நிலை உருவாகியுள்ளது.
அவரது மகனும் முன்னாள் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத், நடிகர் கட்சிக்கு சென்றே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். ஏற்கனவே அந்த கட்சியின் கூட்டங்களை நடத்த நிதி உதவி வழங்கி வருகிறார். இந்த இக்கட்டான நிலையில் இன்று (சனிக்கிழமை) முடிவை அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவர் நல்ல முடிவை அறிவிக்காவிட்டால் தந்தை நடத்தி வரும் அதிமுக தொண்டர்கள் மீட்பு கழகத்தை உடைத்து விட்டு 60 மாவட்ட செயலாளர்களுடன் வெளியேறி, நடிகர் கட்சியில் சேருவேன் என அதிரடியாக கூறி வருகிறார். 3 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்துவிட்டு, நேற்று தொடங்கிய நடிகர் கட்சியில் போய் சீட் கேட்டு போட்டியிடுவதா? என்ற வேதனையில் ஓ.பன்னீர்செல்வம் தவித்து வருகிறார். அவர் தமிழர்களின் உரிமைக்காக போராடி வரும் ஆளுங்கட்சியில் சேர்ந்தால் நல்லது என நினைக்கிறார்.
தினகரனை கூட்டணியில் சேர்த்தால் தேவர் சமுதாய ஓட்டுக்களை பெற்றுவிடலாம் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அதேநேரத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அதிமுக கூட்டணியில் சேர வேண்டாம் என கூறி வருகின்றனர். ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்த சசிகலாவின் ஆதரவில் தான் தினகரன் அதிமுகவில் பொறுப்புக்கு வந்தார்.
சசிகலாவுக்கு பிறகு தற்போது தினகரன் பின்னால் தாங்கள் இருக்கும் நிலையில், சசிகலாவை கட்சியில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டதால் அவருக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் எனவும், தனியாக நின்று தங்களின் பலத்தை காட்டவேண்டும் எனவும் கூறிவருகின்றனர். இதனால் அதிமுக கூட்டணியில் சேராமல் நடிகருடன் செல்லலாமா என்ற யோசனையில் தினகரன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தெரிந்து கொண்ட டெல்லி பாஜக அவரை மிரட்டி பணியவைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
