சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு, நேற்று முதல் நேர்காணலும் தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், நேர்காணலை நடத்தி வருகின்றனர். நேற்று காலை, சேலம் மாநகர், சேலம் புறநகர் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிக்கும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுடன் நேர்காணலை நடத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளரும், இடைப்பாடி தொகுதியின் எம்எல்ஏவுமான எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் சீட் கேட்டு, 3 பேர் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளனர். இதனை எடப்பாடி பழனிசாமியே அறிவித்தார். இடைப்பாடி தொகுதிக்கு 3 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேறு தொகுதிக்கு மாறினால், அந்த இடத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் விருப்பமனு கொடுத்திருக்கலாம். அவ்வாறு தாக்கல் செய்த 3 பேர் யார் என விசாரித்து வருகிறோம்,’ என்றனர்.
ஒரே நேரத்தில் 119 பேரிடல் நேர்காணல்: சேலம் மாநகர் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு, 119 பேர் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தனர். அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேர்காணலை நடத்தினர்.
