கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி நடந்த விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகள் 3 பேர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர், உயர் தொழில்நுட்ப கேமராக்களுடன் கரூருக்கு நேற்று வந்தனர்.
இந்த குழுவினர் காலை 10மணி முதல் 10.30 மணி வரை சிபிஐ விசாரணை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் வேலுசாமிபுரம் வந்த குழுவினர், நெரிசல் சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தனர். விஜய் வாகனம் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டது, அதற்கும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கும் இடையே உள்ள நீளம், அகலத்தை அளவீடு செய்தனர்.
பின்னர் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற குழுவினர், பிரேத பரிசோதனை செய்த 5 டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை நடந்த அறையில் எத்தனை உடல்கள் வைக்கப்பட்டிருந்தது? எத்தனை உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது? வேறு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய உடல்கள் எடுத்து செல்லப்பட்டதா? போன்ற கேள்விகளை மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் சிபிஐ அலுவலகம் சென்றனர்.
* சிபிஐ விசாரணைக்காக விஜய் நாளை டெல்லி பயணம்
கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாக வழக்கில் கடந்த டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாட்கள் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொது செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்பி ஜோஸ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த், டிஎஸ்பி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் டெல்லி வரவழைக்கப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தியது.
அடுத்த கட்டமாக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் வரும் 12ம்தேதி ஆஜராகும்படி கடந்த 6ம்தேதி சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி 12ம் தேதி சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராக உள்ளார். இதற்காக விஜய் நாளை (11ம்தேதி) டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
