கோவை: ஜெயலலிதாவிடம் கை கட்டி நின்றவர் தான் விஜய் என்றும், திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் தருவதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் நடிகரும், பாஜ பிரமுகருமான சரத்குமார் கூறினார். கோவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: சென்சார் போர்டு தற்போது மட்டும் ஒரு படத்தை நிறுத்தவில்லை. இதற்கு முன்பே பல்வேறு படங்களை நிறுத்தி உள்ளார்கள்.
இது தக் லைப் படத்திற்கும் நடந்தது. அதற்கு முன்பு அவரது படத்திற்காக ஜெயலலிதாவிடம் விஜய் கைகட்டி நின்றார். தணிக்கை சான்றிதழ் தருவதில் அரசியல் இல்லை. அனைத்தும் அரசியல் ரீதியாகவே தான் நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சென்சார் போர்டு அந்த படம் சரியாக இல்லை என்று நினைக்கிறது. அரசியல்வாதிகள் யாரும் சென்சார் போர்டில் இடம் பெறவில்லை.
ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. அதேபோன்று எனக்கும் தான் உள்ளது. படம் எடுப்பது மிகப்பெரிய கடினம். ஆனால், அது சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் சினிமாவைப் பற்றி பேசுவது தான் முக்கியமா? கடந்த ஆண்டு பல்வேறு படங்கள் ரிலீஸானது. சென்சார் போர்டுக்கு நான் என்றென்றும் குரல் கொடுத்தது கிடையாது. என்னுடைய அடங்காதே திரைப்படத்திற்கு அனைத்து நடிகர்களையும் குரல் கொடுக்க சொல்லுங்களேன்.
ரூ.10 கோடி செலவு பண்ணிட்டு, 4 வருஷமா அப்படியேதான் கிடக்கு.தற்பொழுது வெளியாக உள்ள பராசக்தி திரைப்படமும் மறு ஆய்வுக்கு சென்று தான் வந்தது. அதை விட்டுவிட்டு ஜனநாயகன் படத்தை எல்லாம் பற்றி பேசுவது வேஸ்ட். விஜய் முதலில் தேர்தலுக்கு வந்து நின்று கேட்க வேண்டும். விஜய் பாஜ கூட்டணிக்கு வருகிறாரா என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
