100 புதிய காப்பு வனங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு: வன பாதுகாப்பு, காலநிலை தாங்கு திறன் வலுப்படும்

சென்னை: தமிழ்நாடு அரசு 100 புதிய காப்பு வனங்களை அறிவித்தது. இதன்மூலம் வனப் பாதுகாப்பு மற்றும் காலநிலை தாங்குதிறனை வலுப்படும். தமிழ்நாடு அரசு 2021 முதல் 2025ம் ஆண்டு வரை மாநிலம் முழுவதும் 100 புதிய காப்பு வனப்பகுதிகளை அறிவிக்கை செய்துள்ளது. இந்த நடவடிக்கை வனப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்புகள் மூலம் காலநிலை தாங்குதிறனை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இந்தியாவின் தேசிய வனக் கொள்கை (1988), நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நாட்டின் புவியியல் பரப்பளவில் 33 சதவீதத்தை வனங்கள் மற்றும் பசுமை பரப்பின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு இந்த தேசிய இலக்கை நோக்கி தொடர்ச்சியாக முன்னேறி வருவதுடன், தற்போது 24.47 சதவீத வனங்கள் மற்றும் பசுமை பரப்பை கொண்டு அறிவியல் பூர்வமாக மேலும் விரிவுபடுத்துவதற்கு ஒரு வலுவான சூழலியல் அடித்தளத்தை வழங்குகிறது.

இந்நிலையில், 100 வனப்பகுதிகளை காப்பு வனங்களாக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள அறிவிக்கை, தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும், முன்னெப்போதும் மேற்கொள்ளப்படாத முன்னோடி முயற்சியாகவும் திகழ்கிறது. இந்த அறிவிக்கைகளின் விளைவாக, கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனங்களின் பரப்பளவு சுமார் 135 சதுர கி.மீட்டர் அளவிற்கு விரிவடைந்துள்ளது.

திண்டுக்கல், தர்மபுரி, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி, சிவகங்கை, நாமக்கல், நீலகிரி, சேலம் மற்றும் தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் 13,494.95 ஹெக்டேர் பரப்பளவில் புதிதாக அறிவிக்கப்பட்ட காப்பு வனங்கள் பரவியுள்ளன. இவற்றுள், புதிதாக அறிவிக்கப்பட்ட தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் வன வட்டாரமானது 2,836.33 ஹெக்டேர் பரப்பளவுடன் கூடிய மிகப்பெரிய வனவட்டாரமாகும்.

வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், 100 புதிய காப்பு வனங்கள் அறிவிக்கை செய்யப்பட்டதனை ஆவணப்படுத்தும் விதமாக நினைவுச் சிறப்பு பதிப்பை வெளியிட்டார். இந்த நிகழ்வின்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான சிறப்பு செயலாளர் அனுராக் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: