கள்ளக்குறிச்சி: தனிக்குடித்தனம் செல்லும் தம்பதிக்கு கான்கிரீட் வீடு கட்டித்தருவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் தியாகதுருகம் அருகே வாழவந்தான் குப்பத்தில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாகக் கொண்டு வருவோம். 2026ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தால் திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செல்லும் பட்டியலின தம்பதிகளுக்கு இலவச கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்.
திருமணம் செய்து கொள்ளும் மணமக்களுக்கு தாலிக்கு தங்கம், மணமகளுக்கு பட்டு சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி-சட்டை, ஆண்டுதோறும் தீபாவளியன்று அனைத்து பெண்களுக்கும் பட்டு சேலை வழங்கப்படும். மேலும் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு உருவாக்க தொழிற்சாலைகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். தற்போதைய காலகட்டத்தில் கூட்டு குடித்தனம் என்பது அரிதாகி விட்டது. கணவனும், மனைவியும் வேலைக்கு செல்லும் நிலையில் குழந்தைகளை பார்த்துக் கொள்வது கடினமாக உள்ளது.
அதேபோல ஒரே மகனை பெற்று வளர்க்கும் தம்பதியர் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து தனியாக அனுப்பிவிட்டால் வயதானவர்களை கவனிக்க ஆளில்லாத நிலைமை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தனித்குடித்தனம் செல்லும் தம்பதிகளுக்கு வீடு வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை புதுமண தம்பதி கைவிட்டு விட்டு செல்ல வேண்டும், குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்று தனித்குடித்தனத்தை எடப்பாடி ஆதாரிப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
* எடப்பாடி முன் தொண்டருக்கு நிர்வாகி ‘பளார்’
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா பகுதியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் பட்டா நிலத்தில் கள்ளக்குறிச்சி நகர அதிமுக சார்பில் 108அடி உயர கொடிகம்பத்தில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அங்கிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மலர்களுடன் வைத்திருந்த சில்வர் தட்டை அதிமுக தொண்டர் ஒருவர் எடுத்துள்ளார். இதை பார்த்த கள்ளக்குறிச்சி நகர செயலாளர் பாபு, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அந்த தொண்டர் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை நேரில் பார்த்தும் எடப்பாடி கண்டும் காணாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
