நெல்லை: அதிமுக கூட்டணியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கூடுதல் தொகுதிகளை பாஜ கேட்பதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கூட்டணியை அதிமுகவினர் பலர் விரும்பாத நிலையில் தற்போது தொகுதிகளும் பறி போய் விடுமோ என புலம்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது.
இதை மனதில் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக – பாஜ கூட்டணி மீண்டும் உருவானது. ஆனால் தற்போது அதிமுகவில் ஓபிஎஸ், டிடிவி இல்லாத நிலையில் செங்கோட்டையனும் தவெகவிற்கு சென்று விட்டார். இதனால் கூட்டணி கட்சியினர் யாரும் வலுவிழந்துள்ள அதிமுகவுடன் கூட்டணி சேராத நிலையில் பாஜ 60 முதல் 70 தொகுதிகளை கேட்டு கெடுபிடி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளை கேட்டு பாஜ அதிமுகவிடம் கெடுபிடி செய்கிறதாம். நெல்லை தொகுதியின் எம்எல்ஏவாக தற்போதைய பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.
தற்போது சிட்டிங் எம்எல்ஏ என்ற முறையில் நெல்லை தொகுதியை பாஜ மீண்டும் கேட்கிறது. மேலும், கடந்த மக்களவை தேர்தலில் நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு 2ம் இடத்தை பிடித்ததுடன் அதிமுகவை 3ம் இடத்திற்கு தள்ளினார். அப்போது பெற்ற ஓட்டுக்களின் அடிப்படையில் நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளையும் பாஜ கூடுதலாக கேட்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மக்களைவைத் தொகுதியில் அந்த கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இரண்டு முறை போட்டியிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் பாஜ வலுவாக உள்ளதாகவும், இந்த மூன்று தொகுதிகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளதாக தெரிகிறது. தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் பாஜ அந்தத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜ கூட்டணியில் இடம் பெற்ற கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். எனினும் தென்காசி தொகுதியை தொடர்ந்து குறி வைத்து வரும் பாஜ தற்போதும் தென்காசி சட்டமன்ற தொகுதியை விடாப்பிடியாக அதிமுகவிடம் கேட்டு வருகிறது.
இது மட்டுமல்லாது பாஜ மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி போட்டியிடுவதற்காக வாசுதேவநல்லூர் தொகுதியையும் கேட்டுள்ளனர். இப்படி தென் மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு 5 தொகுதிகளில் 3 தொகுதிகளை பாஜ கேட்க உள்ளதாம். இதற்கான பட்டியலை தயார் செய்துள்ள தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், திருச்சி வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கியுள்ளாராம். இந்தத் தகவல் தென் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாஜவை கூட்டணியில் சேர்த்ததால், சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைக்காது என மனவருத்தத்தில் உள்ள அதிமுகவினர் தற்போது தாங்கள் வலுவாக உள்ள தொகுதிகளும் பறிக்கப்படுவதால், அந்தத் தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த அதிமுகவினர் சோர்வடைந்துள்ளனர்.
இப்படி தென் மாவட்டங்களில் 8 தொகுதிகள் பறிபோனால் தங்களுக்கு தொகுதி எங்கே மிஞ்சும் என அதிமுகவினர் இப்போதே கவலை அடைந்துள்ளனர். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ கூடுதல் தொகுதிகளை ஒதுக்க கட்டாயப்படுத்தி வரும் நிலையில், தொகுதி கிடைக்காத அதிமுகவினர் தென் மாவட்டங்களில் பாஜவிற்கு தேர்தல் பணியாற்றுவார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது. 5 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த நிலையில், தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் தொகுதியும் இல்லாமல் கூட்டணிக் கட்சிக்கு வேலை செய்யவா? என அதிமுகவில் இப்போதே கலகக் குரல்கள் தென் மாவட்டங்களில் ஒலித்து வருகிறது.
