புதியவர்கள் வரலாம், வேடம் காட்டலாம் வெறும் அட்டை காற்று அடித்தால் காணாமல் போய்விடும்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

சென்னை: சென்னை, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: காலையில் எழுந்து எவ்வளவு தான் ஊர் சுற்றினாலும், இரவு உறங்குவதற்கு, ஓய்வு எடுப்பதற்கு வீட்டுக்கு வந்து தான் ஆக வேண்டும். அதுபோலதான் தமிழ்நாட்டின் எந்த பகுதிக்குச் சென்றாலும், எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் இறுதியாக வந்து சேரும் இடம் இந்த சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி. கடந்த முறை முதன்முறையாகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை.

தலைவர் ஒரு பக்கம் சுற்றுப்பயணத்தில் இருந்தார், என்னால் முடிந்த அளவிற்கு நானும் சுற்றுப்பயணத்தில் இருந்தேன். தேர்தலுக்குத் தொகுதிக்கு அறிமுகம், முதல் தேர்தல், முதல் தொகுதி, மொத்தமே நான்கு நாட்கள்தான் பிரசாரத்தில் ஈடுபட்டேன். இருந்தாலும் கிட்டத்தட்ட 70,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள் என்றால், அது இங்கு வந்திருக்கக்கூடிய கழக நிர்வாகிகள் உங்களுடைய உழைப்புதான் காரணம். வேறு எந்த காரணமும் கிடையாது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் அத்தனை பேரும் ஒன்றாகப் பயணித்து மக்களோடு நின்றிருக்கிறோம்.

நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி உங்களோடு நின்றிருக்கிறேன், நீங்களும் என்னோடு நின்றிருக்கிறீர்கள். நாம் இருவரும் சேர்ந்து மக்களோடு மக்களாக எல்லாவற்றிற்கும் நின்றிருக்கிறோம். அதைக் கொண்டாடுகின்ற விதமாக இன்று இந்த பொங்கல் திருவிழாவை தலைவர் இந்த ஆண்டு ‘திராவிடப் பொங்கல்’, ‘சமத்துவப் பொங்கலாகச்’ சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். உங்களைப் பார்த்து இந்த முறை நீங்கள் அத்தனை பேரும் தேர்தல் பிரசாரத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டும், இந்த முறை நாம் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கேட்பதற்காக வரவில்லை.

நீங்கள் கொடுக்கின்ற உத்வேகத்தில்தான் நான் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய வேண்டும். எனவே, இந்த முறை தலைவர் யாரை உங்களிடம் ஒப்படைத்தாலும் சட்டமன்றத் தேர்தலில் கடந்த முறை பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தலைவர் கேட்டார் என்றால், தலைவர் சொன்னார் என்றால் நீங்கள் செய்துவிடுவீர்கள். ஏனென்றால் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி என்பது எப்பொழுதுமே கலைஞரின் கோட்டை, திமுகவின் கோட்டை, புதியவர்கள் வரலாம், வேடம் காட்டலாம். ஏற்கனவே நான் சொன்னது போலத்தான், வெறும் அட்டை, ஒரு சிறிய காற்று அடித்தது என்றால் காணாமல் போய்விடும்.

தொடர்ந்து மிரட்டல், உருட்டல். நேற்று தமிழ்நாட்டிற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார். ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது என் பெயரைச் குறிப்பிட்டுப் பேசுகிறார். அவருக்கு எப்பொழுதும் என் நினைவாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறார்? என் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுகிறார். என் பெயரைச் சொன்னதனால் எனக்கு புரிந்தது, இல்லையென்றால் எனக்குப் புரிந்திருக்காது. “எதற்கு என் பெயரைச் சொல்கிறார்?” என்று கேட்டேன், பிறகு சொன்னார்கள் உதயநிதி ஸ்டாலினை நாங்கள் முதலமைச்சராக விடமாட்டோம்’ என்று அவர் சொல்கிறாராம். நான் இப்பொழுது கேட்டேனா? நீங்கள் என்ன கூச்சல் போட்டாலும், என்ன சதித்திட்டம் செய்தாலும், தமிழ்நாட்டு மக்கள் எங்களின் தலைவரைத்தான் மீண்டும் முதலமைச்சராக அமர வைப்பார்கள், அது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: