சின்னமனூர்: வேடசந்தூர் அருகே வேன் மோதி பாத யாத்திரையில் சென்ற 2 ஐயப்ப பக்தர்கள் பலியாகினர். மற்றொரு விபத்தில் வேன் வாய்க்காலில் பாய்ந்து சென்னையை சேர்ந்த 13 பேர் காயமடைந்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (55). இவரது தலைமையில் ஆண்டிபட்டி எஸ்.கே.எஸ் பள்ளி தெருவைச் சேர்ந்த ராக்கி (35) உட்பட 7 ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு பாதயாத்திரையாக நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் சின்னமனூர் அருகே சீலையம்பட்டி – வேப்பம்பட்டி பிரிவில் நடந்து சென்றபோது, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே மேலபாடியூரைச் சேர்ந்த தினேஷ்குமார் (34) ஓட்டி வந்த வேன் மோதி, ஐயப்ப பக்தர்கள் மாரிச்சாமி, ராக்கி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிந்து வேன் டிரைவர் தினேஷ்குமாரை கைது செய்தனர்.
இதேபோல், சென்னை திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம், எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குருசாமி சந்திரன் தலைமையில் 24 பேர் சென்ற வேன் திருச்செந்தூர் அருகே உள்ள மின் கம்பத்தின் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்ததில் 13 பேர் காயமடைந்தனர்.
