திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, வாட்ஸ்அப் எண், சமூக வலைதளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்

* பொதுமக்கள், வணிகர், அரசு ஊழியர், விவசாயிகள் கருத்துகளை பரிந்துரைக்கும் வகையில் ஏற்பாடு

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, வாட்ஸ் அப் எண், சமூக வலைத்தளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார். பொதுமக்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் கருத்துகளை பரிந்துரைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் இறுதிவாக்கில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இதுவரை அவர் 100க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் தேர்தல் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,

டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ, இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 22ம் தேதி நடந்தது. அப்போது, திமுகவின் தேர்தல் அறிக்கை, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என கனிமொழி கூறியிருந்தார். இந்த குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைக் கேட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 11.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, வாட்ஸ் அப் எண், சமூக வலைத்தளங்களை அறிமுகம் செய்து வைக்கிறார். இதில் பொதுமக்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்களையும் பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஜனவரி 9ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகளை கேட்ட பின்னர், இந்த குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் அறிக்கையை தயாரித்து வழங்கும். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சரிபார்ப்பு ஒப்புதல் வழங்குவார். அதன் பின்னர் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: