இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம்: ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

சென்னை. ஜன.3: தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2025ம் ஆண்டில் மட்டும் ரூ.2.07 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் மாநிலத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

நிலையான அரசியல் சூழல், முதலீட்டாளர்களுக்கு நட்பான கொள்கைகள், விரைவான அனுமதி வழங்கும் ஒற்றைச் சாளர முறை உள்ளிட்டவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. மேலும், நவீன சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழிற்பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் முதலீடுகளை ஈர்க்க முக்கிய பங்காற்றி வருகின்றன.

உற்பத்தித் துறை, மின்னணு உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள், மின்சார வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், உயிரியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரும் முதலீடுகள் வந்துள்ளது. இந்த ஆண்டில் மொத்தமாக 270 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் சுமார் 4 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு உறுதி செய்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. புதிய முதலீடுகள் மூலம் மாநில இளைஞர்களுக்கு தொழில்நுட்பம், உற்பத்தி, சேவைத் துறைகளில் பெரும் வேலைவாய்ப்புகள் உருவாகும். திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தொழில்துறை கல்வி நிறுவன இணைப்புகள் ஆகியவற்றின் மூலம் இளைஞர்கள் எதிர்காலத்திற்கு தயாராக்கப்படுவார்கள்.

மேலும் வரும் ஆண்டுகளில் முதலீட்டு அளவை மேலும் உயர்த்தி, தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி தொழில் மற்றும் பொருளாதார மையமாக மாற்றுவதே அரசின் இலக்கு. முதலீடுகள், வேலைவாய்ப்புகள், வளர்ச்சி என்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளை மையமாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Related Stories: